இந்தியாவின் புகழ்பெற்ற ஓவியரான ராஜா ரவிவர்மா வரைந்த ‘யசோதா மற்றும் கிருஷ்ணா’ என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஓவியம், மும்பையில் நடைபெற்ற சஃப்ரான் ஆர்ட் ஏலத்தில் ரூ.167.20 கோடிக்கு விற்பனையாகி உலக சாதனை படைத்துள்ளது.

1890-களில் வரையப்பட்ட இந்த எண்ணெய் வண்ண ஓவியத்தில், அன்னை யசோதை பால் கறப்பதும், குழந்தை கிருஷ்ணன் குவளையை எட்டிப் பிடிப்பதும் போன்ற காட்சி தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த ஓவியம் அதிகபட்சமாக ரூ.120 கோடி வரை ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடும் போட்டிக்கு இடையே சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூனாவாலா இதனை மிகப்பெரிய விலைக்கு வாங்கினார்.
இதற்கு முன்னதாக ஓவியர் எம்.எஃப். உசேனின் படைப்பு ரூ.118 கோடிக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ராஜா ரவிவர்மாவின் ஓவியம் அந்தச் சாதனையை முறியடித்து, ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட இந்திய ஓவியம் என்ற புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. ரவிவர்மாவின் ஓவியங்கள் ‘தேசிய பொக்கிஷங்களாக’ வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இவற்றை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்ல அனுமதி இல்லை.

இந்த அரிய கலைப்படைப்பை வாங்கிய சைரஸ் பூனாவாலா, இது ஒரு தேசிய சொத்து என்றும், இதனை அவ்வப்போது பொதுமக்கள் பார்வைக்கு வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நுட்பங்களுடன் இந்திய ஆன்மீகக் கூறுகளை இணைத்து ரவிவர்மா உருவாக்கிய இந்த ஓவியம், இந்திய கலைச் சந்தையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.(Online Tamil News)


