1990களிலும் 2000களின் தொடக்க காலத்திலும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்தவர் நடிகை ரம்பா. அழகும், கவர்ச்சியும், உற்சாகமான நடனமும் சேர்ந்த அவருடைய திரைநடிப்பு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய நகைச்சுவை மற்றும் காதல் கதைகளில் அவர் நடித்த பாத்திரங்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன. மேலும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், பல வெற்றி படங்களில் தனது தனித்துவமான இடத்தைப் பெற்றார். 1990களில் வந்த பல ஹிட் படங்களின் மூலம் “கிளாமர் குயின்” என்ற பெயரையும் பெற்றார். தனது இயல்பான நடிப்பு மற்றும் சுறுசுறுப்பான திரை முன்னிலையில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ரம்பா.
இந்நிலையில், நடிகை ரம்பா (Rambha), சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையுலகிற்குத் திரும்புகிறார். 2010-ம் ஆண்டு வெளியான ‘பெண் சிங்கம்’ படத்திற்குப் பிறகு திருமண வாழ்வில் இணைந்த அவர், கனடாவில் செட்டில் ஆகி சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் ஒரு ரவுண்டு வர முடிவெடுத்துள்ள ரம்பா, இதற்காகக் கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டு உடல் எடையைக் குறைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது 49 வயதாகும் அவர், சில புதிய கதைகளைக் கேட்டு வருவதாகவும், அதில் ஒரு சில கதைகளைத் தேர்வு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘அழகிய லைலா’ மீண்டும் நடிக்க வருவது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


