விண்வெளி ஆர்வலர்களுக்கும் இயற்கை விரும்பிகளுக்கும் ஒரு மிகச்சிறந்த செய்தியாக, வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி சூரிய குடும்பத்திலுள்ள ஆறு முக்கிய கோள்கள் இரவு வானில் ஒரே நேரத்தில் காட்சியளிக்கவுள்ளன. ‘கோள்களின் அணிவகுப்பு’ (Planetary Parade) என்று அழைக்கப்படும் இந்த அரிய நிகழ்வில் புதன், வெள்ளி, வியாழன், செவ்வாய், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்கள் வானில் ஒரு நேர்த்தியான வரிசையில் அணிவகுத்து நிற்கவுள்ளன.

இந்த அரிய நிகழ்வை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) மற்றும் சர்வதேச வானியல் ஆய்வாளர்கள் தங்களது கோள் இயக்கக் கணக்கீடுகளின் அடிப்படையில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். பல ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த அபூர்வக் காட்சி, மீண்டும் 2040-ஆம் ஆண்டில்தான் நிகழும் என்பதால், இது விண்வெளி ஆர்வலர்களுக்கு ஒரு வாழ்நாள் வாய்ப்பாகக் கருதப்படுகிறது. இந்த நிகழ்வின் போது கோள்கள் அனைத்தும் கச்சிதமான நேர்க்கோட்டில் அமையாவிட்டாலும், சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வானில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இவை அனைத்தும் ஒன்றாகப் பரவித் தெரிவது பார்ப்பதற்குப் பேரழகுடன் இருக்கும்.

இந்த வானியல் நிகழ்வின் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், மிகவும் பிரகாசமான கோள்களான வெள்ளி வியாழன் மற்றும் செவ்வாய் ஆகியவற்றை நாம் எந்தவிதத் தொழில்நுட்பக் கருவிகளும் இன்றி வெறும் கண்களாலேயே எளிதாக அடையாளம் காண முடியும். இருப்பினும், பூமியிலிருந்து மிகத் தொலைவில் உள்ள யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களைத் தெளிவாகக் காண்பதற்கு மட்டும் பைனாகுலர்கள் அல்லது சிறிய ரகத் தொலைநோக்கிகள் தேவைப்படும்.
இந்தக் காட்சியைத் துல்லியமாக ரசிக்க விரும்புபவர்கள், நகரத்தின் விளக்கு வெளிச்சம் மற்றும் புகைமூட்டம் குறைந்த, தெளிவான வானம் இருக்கும் பகுதிகளைத் தேர்ந்தெடுப்பது நல்லது என்று வானியலாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.(Online Tamil News)


