தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ராசி வாண்டர் டூசன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

தற்போது 37 வயதாகும் அவருக்கு, தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட 2026-27 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகும் முடிவை எடுத்திருப்பதாகக் கருதப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், மிகக் குறுகிய காலத்திலேயே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்தார்.

இதுவரை 18 டெஸ்ட், 71 ஒருநாள் மற்றும் 57 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள வாண்டர் டூசன், ஒருநாள் போட்டிகளில் 50-க்கும் அதிகமான சராசரியை வைத்திருக்கும் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் மற்றும் பல்வேறு லீக் போட்டிகளில் விளையாட உள்ளதாகத் தெரிகிறது. சிறப்பான ஃபார்மில் இருந்த ஒரு வீரர் திடீரென தனது ஓய்வை அறிவித்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


