கஜூராஹோ போக நேரமும், பணமும் இல்லாதவர்களுக்கு நம்மூரிலேயே இருக்கிறது குட்டி கஜூராஹோ.
திருவண்ணாமலையில் இருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தண்டராம்பட்டு கிராமம். இக்கிராமத்தை அடுத்து உள்ள சிற்றூர் சின்னையன்பேட்டை.

இந்த சிற்றூரில் வயல்களுக்கு நடுவே அமைந்திருக்கிறது அந்த குளம். 16ம் நூற்றாண்டில் சின்னம நாயக்கன் அமைத்த குளம் இது. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைந்த குளம் இப்போது தமிழ்நாடு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

120 சதுர அடி பரப்பளவு கொண்ட இக்குளத்தின் படிக்கட்டுகள் மற்றும் சுற்றுச்சுவர்களில் இயற்கை சிற்பங்களும், காதற் களியாட்டச் சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளனர். இதனால் மன்மதக்குளம் என்றும், காதல் குளம் என்றும், காமக்குளம் என்றும் அழைக்கப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் கஜூராஹோ கோயில் அமைந்திருப்பது போன்று தமிழ்நாட்டிற்கு இக்குளம் அமைந்திருக்கிறது.

செக்ஸ் கல்வியின் தேவையை அன்றைய காலகட்டத்திலேயே உணர்ந்த குறுநில மன்னன் சின்னையன், பொதுமக்களுக்காக இவ்வாறு குளத்தை அமைத்தார் என்றும், செக்ஸில் நாட்டமில்லாது குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்த தன் மகளுக்கு அந்த உணர்வு வர வேண்டுமென்பதற்காக தோழிகளுடன் அவள் குளிக்கும் இந்த குளத்தை இப்படி அமைத்தார் என்றும் பல தகவல்கள் உண்டு. ஆனாலும் இந்த குளம் ஏன் இப்படி அமைந்தது என்பதற்கு ஆதாரப்பூர்வமான தகவல் எதுவுமில்லை.



