தமிழக வெற்றிக் கழகத் தலைவரான நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு வழக்குத் தொடுத்திருக்கிறார். ஏறத்தாழ 27 வருட மணவாழ்வில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், விஜய்யின் போக்குகள், பிள்ளைகளைப் புறக்கணித்தது, நடிகையுடனான விஜய்யின் வாழ்க்கை, தனக்கானப் பொருளாதாரப் பிரச்சினை, மனரீதியான தாக்குதல்கள் உள்ளிட்ட பலவற்றையும் அந்த விவகாரத்து மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் சங்கீதா.
நடிகர்களிடமிருந்து அவரது மனைவியர் விவாகரத்து கேட்பதும், மனைவியரிடமிருந்து நடிகர்கள் விவாகரத்து கேட்பதும் புதிததல்ல. தமிழ்நாட்டிலேயே இது பல முறை நடந்துள்ளது. எனினும், விஜய் இப்போது ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருப்பதால் இந்த விவகாரம் பொதுத்தளத்தில் விவாதமாகியிருக்கிறது. விஜய்யின் ரசிகர்களும் அவரது தொண்டர்களும் எது ஒன்று என்றாலும், தங்களின் அரசியல்-சினிமா எதிரிகள் மீது பழிபோட்டு வசைபாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
கரூரில் நடந்த விஜய் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் இறந்தபோது அதற்கு விஜய்யோ அவரது கட்சியோ கொஞ்சம்கூட பொறுப்பேற்கவில்லை. வருத்தப்படவில்லை. அதற்கு மாறாக, தி.மு.க. அரசுதான் திட்டமிட்டு கொலை செய்தது போன்ற சதிக்கருத்துகளைப் பரப்பினர். கரூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி, அமைச்சர்கள், முதலமைச்சர் வரை அவர்கள் குறி வைத்து கருத்துகளால் தாக்கினார்கள். அண்மையில் வேலூரில் நடந்த கூட்டத்தில் பேசிய விஜய்யும், தன் மீது முதலமைச்சர் பழிபோடுவதாகக் கூறினார். இவையெல்லாம் உண்மைக்கு மாறானது என்றாலும், விஜய் தரப்பு இதனைத் தொடர்ந்து செய்து வருகிறது. இதற்காகவே ஒரு நெட்வொர்க் இயங்கிக் கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் 24 மணி நேரமும் இதனைப் பரப்புவதற்கான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு அவை நிறைவேற்றப்படுகின்றன.
விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து மனு தாக்கல் செய்த விவரம் ஊடகங்களில் வெளியாகி, அந்த மனு விவரங்களும் வெளிப்பட்ட நிலையில், தி.மு.க தரப்புதான் இந்த மனுவை ஊடகங்களில் வெளியிட்டதாக விஜய் கட்சித் தரப்பின் நெட்வொர்க் செய்தியைப் பரப்பியது. தற்போதைய நீதிமன்ற நடைமுறைகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இத்தகைய மனுக்களின் விவரங்கள் எளிதில் எல்லாருக்கும் கிடைத்து வருகின்றன. அரசியல், பொதுநலம், தனிப்பட்ட விவகாரங்கள், ஊழல், லஞ்சம் என எந்த விவகாரமாக இருந்தாலும் அவை உடனே ஊடகத்தில் வெளியாவதைப் பார்க்கிறோம். விஜய் மனைவி சங்கீதாவின் விவகாரத்து மனுவும் அப்படித்தான். எனினும், எல்லாவற்றையும் மற்றவர்கள் மீதே பழிபோடுவதை வழக்கமாகக் கொண்டுள்ள விஜய் தரப்பும் அவரது கட்சியினரும் தி.மு.க. மீது கருத்துத் தாக்குதலை நடத்தியுடன், விஜய் மனைவி குறித்தே அவதூறு பரப்பும் கருத்துகளையும் பதிவிட்டனர். இதனை இந்திய ஜனநாயக மாதர் சங்கம் அமைப்புக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை மீது மற்றவர்கள் கேள்வி எழுப்பமுடியாது. சட்டத்திற்குப் புறம்பாக இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் உரிய நடவடிக்கை கோரி நீதிமன்றம்-காவல்நிலையம் மற்ற அமைப்புகளை நாடலாம். இது நடிகர்களுக்கும் பொருந்தும். நடைபாதைவாசிகளுக்கும் பொருந்தும். அதே நடிகர், பொதுவாழ்க்கைக்கு வரும்போது மற்ற அரசியல் தலைவர்களை நோக்கி விமர்ச்னங்களை எழுப்பும்போது, பதில் விமர்சனங்களும் நடிகர் மீது வைக்கப்படும். அப்போது பொது வாழ்க்கையா, தனி வாழ்க்கையா என்ற பேதங்களை கட்சியினர் மட்டுமல்ல, பொதுமக்களும்கூட பார்ப்பதில்லை. தமிழ்நாட்டில் பதவிக்கு வந்த பிரபல ஆண்-பெண் தலைவர்களே இதனை எதிர்கொண்டுள்ளனர்.
தனிப்பட்ட வாழ்க்கையின் சிக்கல்களை நானே கையாள்கிறேன். பொதுவாழ்க்கையில் என்னோடு போட்டி போடுங்கள் என்பதுதான் அந்தத் தலைவர்களின் அரசியல் செயல்பாடாக இருந்தது. அதனால்தான், விமர்சனங்களைக் கடந்து அவர்களால் மக்களிடம் செல்வாக்குப் பெற்ற தலைவர்களாகக் கடைசி வரை இருக்க முடிந்தது. விஜய் தன் அரசியல் வாழ்வின் தொடக்கத்திலேயே எந்த ஒழுங்கிற்குள்ளும் வராதவராகவும், எந்த நெறிமுறையையும் மதிக்காதவராகவும், எதற்கும் பொறுப்பேற்காதவராகவும் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
சினிமா நடிகரான விஜய்யின் அரசியல் ‘கேரக்டர்’ என்பதும் இப்படித்தான் என்பதை அவரது ரசிகர்களான தொண்டர்கள் ரசிக்கலாம். பொதுமக்களிடம், குறிப்பாகப் பெண்களிடம் விஜய்க்கு இது எதிரான ஆயுதமாகவே மாறும். ஒரு சில ரசிகைகள் இந்த தனிப்பட்ட விவகாரத்திலும் குறுக்கே விழுந்து, தங்களை அர்ப்பணிக்க முன்வருவது சமூக வலைத்தளத்தின் ஓரிரு நாள் பேசுபொருளாக இருக்கலாம். தேர்தல் களம் நெருங்கி வரும் நிலையில், முறையான எந்தவொரு செயலும் இல்லாமல், பிறர் மீது பழிபோடும் அரசியலை மட்டுமே செய்தால் அதற்கான விளைவுகளை எதிர்கொண்டே ஆகவேண்டும்.(Online Tamil News)
தலையங்கம்: விஜய்- விவகாரத்து – வில்லங்கம்!



