அதிமுகவில் இருந்து தவெகவுக்கு சென்றவர்கள் மீண்டும் அதிமுகவுக்கு திரும்புகிறார்கள். இங்குள்ள மரியாதை வேறு எங்கும் கிடைக்காது. மரியாதை, ஏற்கனவே வகித்து வந்த அதே பதவி கொடுத்தால் மீண்டும் அதிமுகவுக்கு வருகின்றேன் என்று சொல்கிறார்கள் என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அதிமுகவின் முக்கிய தலைவர் எஸ்.பி.வேலுமணி.
இவர் இப்படி சொன்னதை அடுத்து அவர் யாரைச் சொல்கிறார்? என்ற சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணன், வில்லிவாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. ஜேசிடி பிரபாகர், வாசுதேவநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு, அதிமுக முன்னாள் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏக்கள் ராஜலட்சுமி, ஏ.ஸ்ரீதரன், அதிமுக ஐடி விங் நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல்குமார் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்துள்ளனர்.

இதில் செங்கோட்டையனுக்கு தவெகவில் உரிய மரியாதை இல்லை என்றும், இதனால் அவர் ஆத் ஆதரவாளர்களிடம் குமுறிக்கொண்டிருக்கிறார் என்றும் அடிக்கடி செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. பொதுவாகவே தவெகவில் யாருக்கும் உரிய அங்கீகாரம் இல்லை என்று செய்திகள் அடிக்கடி வந்துகொண்டிருக்கும் நிலையில் எஸ்.பி.வேலுமணி இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார். அவர் யார் யாரைச் சொல்கிறார்? என்ற சலசலப்பு எழுந்திருக்கிறது பனையூர் வட்டாரத்தில்.



