இந்து மதத்தின் உன்னதத்தை உலகறிய உயர்த்திப் பிடித்த பெருமை விவேகானந்தருக்கே உரியது. அவரையே தன் அதிசய ஆற்றலால் வியப்படைய வைத்தவர் தமிழகத்தில் இருந்தார். அவர் கோவிந்த செட்டியார்.
அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், கும்பகோணம் பகுதியில் உள்ள வலங்கைமான். வலங்கைமானில் ஏறத்தாழ 125 ஆண்டுகளுக்கு முன் வசித்து வந்த பிரபலமான ஜோதிடர்தான் கோவிந்த செட்டியார். இவர் ஒரு வித்தியாசமான ஜோதிடர். அவரிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்கள், எதைக் கேட்க வேண்டும்? என்று மனதில் எண்ணிக் கொண்டு வருகிறார்களோ, அதை அவர்கள் முகத்தைப் பார்த்தேக் கூறிவிடுவார். அவர்கள் எண்ணி வந்த செய்தி நடக்கும், நடக்காது என்பதையும் துல்லியமாகச் சொல்லக்கூடிய அதிசய ஆற்றலை அவர் பெற்றிருந்தார். இதனால் அவரது புகழ் எங்கும் பரவி, ஜோதிடம் மூலம் அதிகமாகப் பணம் சம்பாதித்து வந்தார்.
1893ல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தார் விவேகானந்தர். அது அவர் புகழ் பெறாத காலம். தமிழகச் சுற்றுப் பயணத்தின்போது, கோவிந்த செட்டியாரின் ஆற்றல் பற்றி அறிந்த விவேகானந்தர், அவரைப் பரிசோதித்து உண்மையை அறிய விரும்பினார். பிறர் மனதில் ஓடும் எண்ணங்களை அறியும் ஆற்றல் உடையவர் கோவிந்த செட்டியார்.
பலர் ஜோதிடம் என்பதைப் பிழைப்பாக வைத்து ஏமாற்றி வந்ததால், கோவிந்த செட்டியாரைப் பற்றி நேரில் சென்று உண்மையை அறிய விரும்பினார் விவேகானந்தர். தன் குருவான பகவான் ராமகிருஷ்ணரையேப் பரிசோதித்து உண்மை அறிந்த பின் ஏற்றுக் கொண்டவரல்லவா விவேகானந்தர். எனவேக் கோவிந்த செட்டியாரைப் பரிசோதித்து உண்மையை அறிய அவர் நினைத்ததில் வியப்பில்லை.

இரண்டு நண்பர்கள் துணையுடன் வலங்கைமானுக்கு சென்றார் விவேகானந்தர். முன்னதாகவே சோதிடரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை விவேகானந்தர் தன் மனதில் வரிசைப்படுத்தி வைத்துக் கொண்டார். முதல் கேள்வி அவரது தாயார் குறித்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு விவேகானந்தருக்குத் தனது தாயார் அகால மரணம் அடைந்தது போல ஒரு கனவு வந்திருந்தது. அது அவருக்குத் துயரத்தை ஏற்படுத்தியிருந்தது. எனவே, தனது தாயார் பற்றிய எண்ணத்தை முதல் கேள்வியாக மனதில் பதிய வைத்துக் கொண்டார்.
இரண்டாவது கேள்வி, தனது குருநாதரான இராமகிருஷ்ண பரமஹம்சர் தனக்குப் போதித்த உண்மைகள் எந்த அளவு சாத்தியமாகி நடைமுறைக்கு வரும்? இது தனது உள்ளத்தில் அவர் பதித்துக் கொண்ட இரண்டாவது கேள்வி.
மூன்றாவதாகத் தன் மனதில் அவர் அமைத்துக் கொண்டது, திபெத்திய மொழியில் உள்ள ஒரு புத்தமத மந்திரம். இவை மூன்றும், கோவிந்த செட்டியாரைச் சந்திப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, அவர் தனது மனதில் எழுதி வைத்துக் கொண்டவை.
உடன் சென்ற நண்பர்களிடம் கூட என்ன கேட்கப் போகிறோம் என்பதைக் கூறாமல், சென்றிருந்தார் விவேகானந்தர்.
விவேகானந்தருடன் வந்த நண்பர் ஒருவர் ஜோதிடரிடம், தாங்கள் ஆருடம் பார்க்க வந்திருப்பதைத் தெரிவித்தார். எனக்குச் சேவைக் கட்டணமாக 10 ரூபாய் கொடுக்கச் சம்மதித்தால் உங்களுக்கு ஆருடம் கூறுகிறேன்” என்றார். அந்த காலத்தில் 10 ரூபாய் என்றால் மிகப்பெரிய தொகை. உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் சந்திப்பை தவிர்ப்பதற்காகவே அந்த தொகையை கேட்டார் சோதிடர். ஆனால் அதை கொடுத்ததும் விவேகானந்தரை தனது அறைக்குள் வரும்படி அழைத்தார் சோதிடர். பின்னர் விவேகானந்தருடன் வந்த இரண்டு நண்பர்களையும் தனது அறைக்குள் அழைத்துக் கொண்டார்.

ஒரு வெள்ளைக் காகிதத்தில் ஏதோ எழுதி, அந்த நண்பர்களில் ஒருவரது சட்டைப்பையில் அந்தக் காகிதத்தை வைத்தார் சோதிடர். அதன்பின் விவேகானந்தரிடம் பேசத் துவங்கினார்.
சந்திப்பு முடிந்ததும் விவேகானந்தர் தன்னுடன் வந்த நண்பரின் சட்டைப்பையில் இருந்த காகிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தார். ஜோதிடர் கூறியபடியே, விவேகானந்தர் தன் மனதில் நினைத்திருந்த அத்தனையும் அப்படியே எழுதப்பட்டிருந்தன.
விவேகானந்தரின் தாயார் பெயர் புவனேஸ்வரி என்பது காகிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அடுத்து, விவேகானந்தரின் குரு இராமகிருஷ்ண பரமஹம்சர் என்பதும், அவர் மகா சமாதி அடைந்து விட்டார் என்பதும், எனினும் அவர் சூட்சம நிலையில் விவேகானந்தரைக் கவனித்து வருகிறார் என்பதும் எழுதப்பட்டிருந்தது. மூன்றாவதாக விவேகானந்தர் நினைத்த திபெத்திய மொழியில் உள்ள புத்த மத மந்திரமான ” லாமாலா காப் சேகவா” என்பதும் சரியாக எழுதப்பட்டிருந்தது. கடைசியாக, உரையாடும் போது கூறிய, “ஓம் பகவதே வாசுதேவாயா ” என்ற மந்திரச் சொல்லையும் ஒரு மணி நேரம் முன்னதாகவே ஜோதிடர் காகிதத்தில் எழுதி வைத்திருந்தார்.
விவேகானந்தர் வியப்பின் எல்லைக்கேச் சென்று விட்டார் . மன வலிமை மிக்கத் தன் மனதை ஊடுருவிப் பார்த்ததோடு மட்டுமில்லாமல், ஒரு மணிநேரத்திற்குப் பின் தனக்குத் தோன்றப் போகிற மந்திரச் சொல்லையும் முன்கூட்டியே எழுதுவது என்றால் அது அதிசயமான ஆற்றல்தானே?
கோவிந்த செட்டியாரைப் பாராட்டி விட்டு விடை பெற்றார் விவேகானந்தர். இந்த அதிசய நிகழ்ச்சி குறித்து விவேகானந்தர் தனது நண்பரான ‘ கேத்ரி ‘ மன்னருக்கு 15.2.1893 அன்று ஒரு கடிதம் எழுதி, அதில் நடந்த நிகழ்ச்சிகள் அத்தனையையும் விலாவாரியாக விவரித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின் அமெரிக்கா சென்ற விவேகானந்தர், சிகாகோ சர்வமத சபையில் பேசி உலகப்புகழ் பெற்றார்.
ஜனவரி 12,2026 விவேகானந்தரின் 1 64ஆவது பிறந்த நாள்.



