தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு அடுத்ததாக அக்கட்சியில் ரொம்பவே ஆக்டிவ்வாக உள்ளவர்கள் வினோஜ் பி செல்வம், எஸ்.ஜி.சூர்யா. இந்த மூவருக்குமே இந்த சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என்பதால் அக்கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது.
2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களமிறங்கும் முடிவில் அதற்கான களப்பணிகளை மேற்கொண்டு வந்தார் அண்ணாமலை. ஆனால் கூட்டணிக்காக அவர் பலிகொடுக்கப்பட்டுவிட்டார். அதனால்தான் அவரை தூக்கி கடாசிவிட்டு நயினார் நாகேந்திரனை அந்த இடத்திற்கு கொண்டு வந்தது பாஜக டெல்லி தலைமை.
இதனால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் அண்ணாமலையை இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அவரது ஆதரவாளர்கள் விருப்பம் தெரிவித்து வந்தனர். அதன்படி கோவை வடக்கு பகுதியில் தான் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்திருக்கிறார் அண்ணாமலை. சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதிகளை கிடைத்தாலும் பரவாயில்லை என்று நினைத்தாலும் குறிப்பாக கோவை வடக்கு தொகுதியை குறி வைத்து அண்ணாமலையின் ஆதரவாளர்கள் களப்பணிகளை செய்து வந்தனர்.

கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டபோது கோவை வடக்கு தொகுதியில்தான் அண்ணாமலைக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. இதனால்தான் இந்த தொகுதியை அண்ணாமலை குறிவைத்திருந்தார்.
ஆனால், தொகுதிப்பங்கீட்டில் நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து பார்த்த உள்ளடி வேலைகளால்தான் கோவையில் உள்ள 10 தொகுதிகளில் கோவை வடக்கு தொகுதியை மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கியது அதிமுக. கோவை தெற்கு தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் என்பதால் அவருக்கு மீண்டும் அங்கே வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அந்த தொகுதியைத்தான் வழங்க கேட்டிருந்தார் நயினார். ஆனால், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் வென்றாலும் வெறும் 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்ததால் அந்த தொகுதியில் மீண்டும் களமிறங்க விரும்பவில்லை வானதி சீனிவாசன். இதனாலேயே அவர் கேட்டபடி கோவை வடக்கு தொகுதியை வாங்கிக்கொடுத்திருக்கிறார் நயினார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதிகளில் களப்பணிகள் மூலம் தனக்கு செல்வாக்கு சேகரித்து வைத்திருக்கும் அண்ணாமலையை அங்கே போட்டியிடாமல் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டே கோவையில் ஒரே தொகுதியை மட்டும் கேட்டு வாங்கி, அதுவும் அண்ணாமலை விரும்பிய தொகுதியை மட்டும் கேட்டு வாங்கி அதையும் வானதிக்கு சிபாரிசு செய்துவிட்டார் நயினார். இதனால் அதிருப்தி அடைந்த அண்ணாமலை, தான் இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று உறுதியாக சொல்லிவிட்டார். அவரை சமாதானப்படுத்தும் நோக்கில் பாஜக தலைமை டெல்லிக்கு அழைத்து மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிடச் சொன்னது. நிச்சய வெற்றியை தரும் தொகுதியை தட்டிப்பறித்துவிட்டு மொடக்குறிச்சியில் போட்டியிட விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார் அண்ணாமலை.

இதனால் வானதி சீனிவாசனிடம் கோவை வடக்கு தொகுதியை அண்ணாமலைக்கு விட்டுக்கொடுக்கும்படி தலைமை கேட்க, போட்டியிட்டால் கோவை வடக்கில் போட்டியிடுகிறேன். இல்லை என்றால் தேர்தலிலேயே நிற்கவில்லை. எனக்கு ஒன்றிய இணை அமைச்சர் பொறுப்பு, குறிப்பாக எல்.முருகனிடம் இருக்கும் துறை பொறுப்பை ஒதுக்கிவிடுங்கள் என்று கறார் காட்டி இருக்கிறார். இதனால்தான் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட தாமதம் ஆகிக்கொண்டே இருந்தது.
கடைசியில் அண்ணாமலையை பலி கொடுத்திருக்கிறது டெல்லி தலைமை. அதற்கு துணை நின்றிருக்கிறார் நயினார்.

ஆனால், அண்ணாமலைக்கு ஏன் சீட் கொடுக்கவில்லை? என்று கேட்டால், அவர் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பணியாற்ற விரும்புகிறார். அதனால் ஒரு தொகுதியில் அவர் தேங்கி நிற்க விரும்பவில்லை என்று சமாளிக்கிறார் பியூஸ் கோயல்.
2011 உள்ளாட்சி தேர்தலில் ஆயிரம் விளக்கிலும், 2021 சட்டமன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியிலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் சென்னை மத்தி தொகுதியிலும் நின்று தோல்வி அடைந்தவர் வினோஜ் பி செல்வம். 2021ல் தோற்றாலும் பி.கே.சேகர்பாபு பெற்றிருந்த வாக்குகளில் பாதியை பெற்றிருந்தார் வினோஜ். இந்த முறை எப்படியாவது விட்ட இடத்தை பிடித்துவிடலாம் என்று நினைத்திருந்தார். ஆனால் சென்னையிலேயே பாஜகவுக்கு சீட் வாங்கவில்லை நயினார். எஸ்.ஜி.சூர்யாவுக்கும் தலைமை சீட் வழங்காததில் அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

எளியோர்கள், இளைஞர்கள் என்று நிறைய மக்கள் நல உதவிகளைச் செய்திருக்கிறார் சூர்யா. இவருக்கும் சீட் மறுத்தது ஏன் என்றால்? அண்ணாமலையை மட்டும் அல்லாது அவரது ஆதரவாளர்களும் சட்டமன்றத்திற்குள் நுழையக்கூடாது என்று நயினார் நாகேந்திரனுடன் எடப்பாடி பழனிசாமி போட்ட திட்டம்தான் வினோஜ் பி செல்வத்திற்கும், எஸ்.ஜி.சூர்யாவுக்கும் சீட் கிடைக்கவில்லை என்கிறது கமலாலயத்தில் இருந்து வரும் தகவல்.



