17.1.1917 – முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109ஆவது பிறந்த நாள் சிறப்பு பதிவு இது.
தமிழர் பண்டிகைகளில் எம்.ஜி.ஆருக்கு பிடித்தது ‘பொங்கல் திருநாள்’. இந்த நாளில் ராமாவரம் தோட்டத்திற்கு தன்னை பார்க்க வரும் அனைவருக்கும் பணப்பரிசு கொடுத்து பொங்கல் வாழ்த்து சொல்லுவார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரிடம் பொங்கல் வாழ்த்து பெறுவதற்காக அவரது ரசிகர்களும் தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் ராமாவரம் தோட்டத்தில் குவிந்திடுவார்கள். அத்தனை பேருக்கும் பணம் கொடுப்பார்.

கொடுக்கின்ற பணத்தை எண்ணி கொடுக்க மாட்டார். கையில் என்ன வருகிறதோ, அதை அப்படியே கொடுத்துவிடுவார். ஒருவருக்கு 10 ரூபாயாக இருக்கலாம். இன்னொருவருக்கு 50 ரூபாயாக இருக்கலாம். வேறு ஒருவருக்கு 100 ரூபாயாக இருக்கலாம்.

மறைந்த திரைப்பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் எம்.ஜி.ஆரின் ரசிகர். அவர் இதை நேரில் பார்த்திருக்கிறார். தான் பார்த்து வியந்ததை அவர் முன்னொரு முறை கூறி இருந்தார். ’’மூட்டை மூட்டையாக பணக்கட்டுகள் இருக்கும். ஒவ்வொரு பணக்கட்டையும் எடுத்து பிய்த்து பிய்த்து கொடுப்பார். ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வருகிறதோ, அது அவர்களின் அதிர்ஷ்டம். பல மணி நேரம் நின்று அத்தனை பணக்கட்டுகளையும் பிய்த்து சிரித்து முகத்துடன் பரிசு கொடுப்பார். அந்த அளவிற்கு அவரிடம் உடல் வலிமை இருந்தது. நல்ல மனதும் இருந்தது’’ என்று தெரிவித்திருந்தார்.



