தேர்தல் களத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் சின்னம் அமைவது முக்கியமானது. மக்கள் மனதில் எளிதில் பதியக்கூடியதாகவும், சுவர் விளம்பரத்திற்கு எளிதாகவும் இருக்கக்கூடிய சின்னங்களையே கட்சிகள் தேர்வு செய்வது வழக்கமாக இருந்தது. தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் எந்த சின்னத்தையும் மக்களின் மனதில் பதிய வைத்து விட முடியும். அந்த வகையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பது கவனத்திற்குரியதாக அமைந்துள்ளது.
‘விசில் போடு’ என்று தன் படத்தில் பாட்டு வைத்தவர் விஜய். விசிலின் இன்னொரு பெயரான ‘பிகிலு’ என்பதை இன்னொரு படத்திற்குத் தலைப்பாக வைத்திருந்தார். அதனால், தன்னுடைய ரசிகர்களிடம் இது விஜய் சின்னம் என்பதை எளிதில் பதிய வைக்க முடியும். “தியேட்டரில் என் படத்தைப் பார்த்து விசிலடித்து வெற்றி பெற வைத்த என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களே.. தேர்தலிலும் விசில் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள்” என்று பஞ்ச் டயலாக்குடன் பிரச்சாரம் செய்யவும் முடியும்.
த.வெ.க.வுக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட அறிவிப்பு வெளியானவுடன் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த், ஒரு தட்டு நிறைய விசில்களை வைத்து, அதிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து ஊதி தன் பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். விஜய் ரசிகர்கள் வழக்கம்போல கட்சித் துண்டை கழுத்தில் சுற்றிக்கொண்டு, விசில் ஊதியபடியே தெருக்களில் இறங்கி, பஸ்ஸை மறித்து, போக்குவரத்தை நிறுத்தி, ஊதித் தள்ளியபடியே இருக்கும் வீடியோக்களை ஷேர் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.(Online Tamil News)
சினிமா ரசிகர்களை விசிலடிச்சான் குஞ்சுகள் என்று விமர்சிப்பது எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே உள்ளது. விசிலடிச்சான் குஞ்சுகளே என்று ஒரு பழைய படத்தில் பாட்டும் இடம்பெற்றது. விஜய் தன் கட்சி மாநாட்டில் பேசும்போது, “மற்றவர்களைப் போல நம் கட்சியினர் விசிலடிச்சான் குஞ்சுகளாக இருக்கக்கூடாது. அப்படி யாரும் நம்மை சொல்லக்கூடாது” என்று பேசினார். ஆனாலும், விதி வலியது. அவரது கட்சிக்கு, அவர் தரப்பில் கேட்டபடியே, விசில் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது தேர்தல் ஆணையம்.
கமல்ஹாசனின் (Kamal Haasan) மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பழையபடியே டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சிக்கு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது. ஆனாலும், அதன் வாக்கு சதவீதம் உயர்ந்தது. அதன்பின்னர், இடைத்தேர்தலில் மற்றொரு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. சில கட்சிகளுக்கு எளிதாக சின்னங்கள் கிடைத்து விடுகின்றன. சில கட்சிகள் போராடி சின்னங்களைப் பெற வேண்டியுள்ளது.
அ.தி.மு.க. தொடங்கப்பட்டு முதன் முதலாக 1973ஆம் ஆண்டில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது, அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம், இரட்டை இலை. அதன்பின்னர் அந்த சின்னத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அ.தி.மு.க.வை உருவாக்கிய எம்.ஜி.அர். இறந்தபிறகு, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டு அணிகளாக அ.தி.மு.க. 1989 தேர்தல் களத்தை சந்தித்தது. அப்போது ஜானகி அணிக்கு இரட்டைப் புறா சின்னமும், ஜெயலலிதா அணிக்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது.
ஆட்டோவில் கொடிக் கட்டுவது போல உண்மையான சேவலைக் கட்டியபடியும், இரண்டு புறாக்களைக் கட்டியபடியும் இரண்டு அணியினரும் போட்டிப் போட்டுக் கொண்டு செய்த பிரச்சாரத்தில், அந்த இரண்டு பறவைகளும் படாதுபாடு பட்டன. கட்சிக் கொடிக்குள் பூ வைத்துக் கட்டி, உச்சியில் ஏற்றியதும், கயிறை இழுத்துப் பூவைக் கொட்டச் செய்வது போல, புறாக்களை கட்டி வைத்துவிடுவார்கள். கட்சியின் வேட்பாளர் எப்போது வருகிறாரோ அதுவரை கொடிக்குள்ளேயே புறாக்கள் தவிக்கும். கொடியை ஏற்றி, கயிற்றை இழுக்கும்போது, பறக்க வேண்டிய புறாக்கள், பொத்தென்று செத்து விழுந்த கொடுமைகளும் உண்டு.
ஒரு கட்சியும் இன்னொரு கட்சியும் சண்டை போட்டுக் கொள்ளும்போது, இந்த அணியினர் அந்த அணியின் சேவலை அறுப்பதும், அந்த அணியினர் இந்த அணியின் புறாக்களை அறுப்பதும் கூட சர்வசாதாரணமாக நடந்தது. இத்தகைய களேபரங்களைப் பார்த்தபிறகுதான், எளிய பறவைகள்-விலங்குகளை சின்னங்களாக ஒதுக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் தவிர்த்தது. அதன்பிறகு அ.தி.மு.க.வின் இரண்டு அணிகளும் மீண்டும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டன.
ஒலி மாசு ஏற்படுத்தும் வகையிலும், பொது இடங்களில் அமைதியைக் கெடுக்கும் வகையிலும், பிற கட்சிகளின் கூட்டங்களுக்குள் புகுந்தும், ‘விசில்’ சத்தம் கேட்கத் தொடங்கினால், இந்தத் தேர்தலுக்காக மட்டும் த.வெ.க.வுக்கு வழங்கப்பட்டிருக்கும் விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
தலையங்கம் : சின்னங்களும் எண்ணங்களும்


