அதிமுக ஆட்சி மலரும் என்று எடப்பாடி பழனிசாமிதான் சொல்லி வருகிறாரே தவிர, தமிழகத்தில் 2026 தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா அடிக்கடி சொல்லி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி என்றாலும் மாநிலத்தை பொறுத்தவரையிலும் அதிமுக ஆட்சி மலரும் என்று அமித்ஷா இதுவரையிலும் சொல்லவே இல்லை.
இது ஒரு புறம் இருக்க, தமிழகத்தில் இரட்டை எஞ்சின் ஆட்சி அமையும் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அடிக்கடி சொல்லி வந்தார். இதை இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் 2026 தேர்தல் முதல் பொதுக்கூட்ட மேடையிலேயே வெளிப்படையாக போட்டுடைத்துவிட்டார் பிரதமர் மோடி.

கூட்டணி ஆட்சியை தமிழ்நாடு விரும்புகிறது. தமிழத்தில் இரட்டை எஞ்சின் ஆட்சி அமையும் என்று பேசினார். அதுவும் அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சி என்று சொல்லாமல், பாஜக – என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமையும் என்று பேசினார். இதில் மேடையில் அமர்ந்திருந்த எடப்பாடி பழனிசாமி மட்டுமில்லாது மேடைக்கு எதிரே திரண்டிருந்த அதிமுக தொண்டர்களும் அதிர்ந்தனர்.
அதுமட்டுமல்லாது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி என்று பெயரைக்குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினாலும் கூட, 45 நிமிட தனது உரையில் ஒரு இடத்தில் கூட ‘அதிமுக’ என்ற வார்த்தையை குறிப்பிடவில்லை. இது அதிமுக தொண்டர்களை கடும் அதிருப்தியடைய வைத்திருக்கிறது. தங்களின் தன்மானத்தை உரசி விட்டதில் அதிமுகவினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



