மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் (Ajit Pawar) விமான விபத்தில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த விபத்து குறித்து பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தேகம் தெரிவித்துள்ளதுடன், இது சாதாரண விபத்தாக இருக்க வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ளார். இதன் பின்னணியில் ஏதேனும் சதி இருக்கக்கூடும் என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி (Mamata Banerjee), நாட்டின் முக்கிய அரசியல் தலைவர் ஒருவர் இவ்வாறு உயிரிழப்பது மிகக் கவலைக்குரியது என்றும், இதுபோன்ற சம்பவங்களில் உண்மை வெளிவர வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், மத்திய அரசு அல்லது மாநில அரசு நடத்தும் விசாரணை மீது முழு நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அஜித் பவார் சமீபத்தில் அரசியல் ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க இருந்ததாகவும், அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலகலாம் என்ற தகவல்கள் வெளியானதாகவும் மம்தா பானர்ஜி குறிப்பிட்டார். இதுபோன்ற சூழ்நிலையில் நடந்த இந்த விமான விபத்து, சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது என்றும் அவர் கூறினார். அதனால் தான், எந்த அரசியல் தலையீடும் இல்லாத வகையில், உச்ச நீதிமன்ற கண்காணிப்பிலான விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்க கொண்டு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அஜித் பவார் மரணம் தொடர்பாக முழுமையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல எதிர்க்கட்சித் தலைவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.(Online Tamil News)


