மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத்பவாரின் மூத்த சகோதரர் ஆனந்த் ராவ் மகன் அஜித் பவார். இவர் 6 முறை துணை முதல்வராக இருந்துள்ளார்.
தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் அடுத்த முகம் யார் என்பதில் ஏற்பட்ட மோதலில் தனித்து நின்று பாஜகவுடன் கூட்டணி அமைத்தவர் அஜித் பவார். சரத்பவாரின் மனசாட்சி என்று கூறப்பட்ட அஜித் பவார் சரத் பவாரையே எதிர்த்து களமாடினார். அண்மைக்காலமாக சரத்பவார் குடும்பத்துடன் இணக்கம் காட்டி வந்த நிலையில் இன்று அவர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிராவில் தேவ்லாலி சிற்றூரில் 1959ல் பிறந்தவர் அஜித் பவார். 1982 முதல் அரசியல் பயணத்தை தொடங்கினார். சர்க்கரை ஆலைகளின் கூட்டுறவு உறுப்பினர், கூட்டுறவு வங்கி தலைவர் பதவிகளில் வகித்து வந்த அஜித் பவார் 1991ல் பாராமதி மக்களவை தொகுதியில் நின்று வென்றார். தன் சித்தப்பா சரத் பவாருக்காக அந்த வெற்றியை விட்டுக்கொடுத்துவிட்டார்.

இதன் பின்னர் மாநில அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் அஜித் பவார். பாராமதியில் முக்கிய அரசியல் முகம் ஆனார். 1991ல் இருந்து 2019 வரையிலும் பாராமதியில் 7 முறை வென்று எம்.எல்.ஏ. ஆனார். 32 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பாராமதியின் எம்.எல்.ஏ. வாக இருந்து வந்தார்.
1991ல் வேளாண் துறை இணை அமைச்சர் ஆனவர், அதன் பின்னர் மின்சாரத்துறை அமைச்சர் ஆனார். 1995ல் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தோற்று சரத் பவார் எம்.பி. ஆனாலும் கூட, தொடர்ந்து மாநில அரசியலில் கவனம் செலுத்தி மகாராஷ்டிராவில் கட்சியின் செல்வாக்கினை மேம்படுத்தினார். 1999ல் மகாராஷ்டிரா நீர்வளத்துறை அமைச்சரானார். 2004ல் அஜித் பவார் முதல்வராயிருக்க வேண்டியவர். கூட்டணியை கருத்தில் கொண்டு சரத் பவா காங்கிரசுக்கு ஆட்சியை விட்டுக்கொடுத்தார்.

கடந்த 2003ல் சித்தப்பா சரத்பவாரிடம் இருந்து விலகி, தேசியவாத காங்கிரசை உடைத்துக்கொண்டு வெளியேறினார். கட்சியின் சின்னம், கொடியையும் தேர்தல் ஆணையம் மூலம் பெற்றுவிட்டார். ஏக்நாத் ஷிண்டேவுடன் கைகோர்த்து துணை முதல்வர் ஆனார் அஜித் பவார். கடந்த ஆண்டும் துணை முதல்வர் ஆனார்.

தொடர்ச்சியாக துணை முதல்வராக இருந்து வந்த போதிலும் தான் முதல்வர் ஆக வேண்டும் என்கிற கனவில் அதற்கான முன்னெடுப்புகளில் இருந்தார் அஜித் பவார். திடீர் மரணத்தால் அவரது முதல்வர் கனவும் கருகிப்போனது மட்டுமல்லாமல், அஜித் பவார் தலைமையில் செயல்பட்டு வந்த தேசியவாத காங்கிரசின் எதிர்காலம் என்னவாகும் என்கிற கேள்விக்குறி எழுந்திருக்கிறது.



