காலாவதியான ஆவணங்களை கொடுத்திருக்கிறார் அன்புமணி. அது செல்லாது என்று ராமதாஸ் தரப்பு சொன்னாலும் கூட, தேர்தல் ஆணையம் அன்புமணி தலைமையினாலான பாமகவை ஏற்றுக்கொண்டது. டெல்லி உயர்நீதிமன்றமும் இதை ஏற்றுக்கொண்டதை அடுத்து பாமகவும் மாம்பழம் சின்னமும் அன்புமணி வசம் சென்றுவிட்டது.
ஆனாலும் பாமகவும் மாம்பழமும் தனக்குத்தான் சொந்தம் என்று ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கு எப்போது முடியும் என்பது யாருக்குத் தெரியும்?
தேர்தல் நெருக்கத்தில் இனியும் சட்டப்போராட்டத்தை நம்பி பிரயோசனம் இல்லை. அதையே நம்பிக்கொண்டிருந்தால் அன்புமணிக்கு எதிராக வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்க முடியாது என்பதை உணர்ந்த ராமதாஸ் தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்திருக்கிறார்.

இதற்காக, ’அய்யா பாமக (APMK)’’ என்ற பெயரை உடனே தேர்தல் ஆணையம் பதிவு செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் அருள் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
தேர்தல் அறிவிப்புக்கு முன்பே கட்சியை பதிவு செய்தால் தான் ’அய்யா பாமக’வுக்கு பொது சின்னம் கிடைக்கும் என்பதால், அவசர அவசராமக தேர்தல் ஆணையம் சென்றபோது, புதிய கட்சியின் முகவரி தவறாக இருப்பதாகக் கூறி விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்.

அய்யா பாட்டாளி மக்கள் கட்சி, 2026 தமிழக தேர்தலில் நாங்கள் போட்டியிட்டே ஆக வேண்டும். அதற்காக, உடனடியாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அருள் மனு செய்திருந்தார். இதற்கு தீர்வு காணுமாறு கூறி உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளது.
பாமக யாருக்கு? என்று ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் நடந்து வந்தபோதே ஒருவேளை அன்புமணி வசம் சென்றுவிட்டால் என்னாவது? என்று முன்கூட்டியே யோசித்துதான் கடந்த நவம்பர் மாதத்திலேயே தனிக்கட்சி தொடங்குவதற்கான முயற்சிகளை எடுத்து வந்திருக்கிறார் ராமதாஸ். முன்பிருந்த பாமக கொடியின் நடுவே ராமதாஸ் படம் இருக்க புதுக்கொடி உருவாக்கப்பட்டிருக்கிறது.
மாம்பழத்தை பறித்துக்கொண்டால் என்ன, பொதுச்சின்னத்தில் போட்டியிட்டு வீழ்த்துவேன் என்று சபதமெடுத்திருக்கிறார் ராமதாஸ்.



