தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்பதே ஹாட் நியூஸாக உள்ளது. 1967ல் தமிழ்நாட்டில் தி.மு.க.விடம் ஆட்சியை இழந்த காங்கிரஸ், 60 ஆண்டுகள் கழித்து 2026ல் தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைந்தால் அதில் பங்கேற்கும் வகையில் ஒப்பந்தம் போட்டால் மட்டுமே கூட்டணி என்ற மனநிலையில் இருப்பதை காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுப் பிரமுகர்கள் பலர் தொடங்கி, கட்சியின் மேலிடப் பார்வையாளர் வரை பலரிடமிருந்தும் அறிய முடிகிறது.
இது குறித்து காங்கிரஸ் தலைமையின் முடிவு என்ன, சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோரின் முடிவு என்ன என்பது வெளிப்படையாகத் தெரிவதற்கு முன்பே, காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் ஆளாளுக்குத் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். அந்தக் கருத்துகளில் உடன்பாடில்லை என்கிற மறுப்பு அகில இந்தியத் தலைமையிடமிருந்து வரவில்லை. இதுதான் தி.மு.க.வுக்கும் அதன் தோழமையில் உள்ள மற்ற கட்சிகளுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியில் பங்கு கேட்பதும் கொடுப்பதும் பாவ காரியமல்ல. ஆனால், அதற்கான களச்சூழல் அமைய வேண்டும். காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலேயே மிகவும் பலவீனமடைந்த கட்சியாக உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஒரு பத்தாண்டுகள் தவிர 2014வரை ஆட்சியில் இருந்த கட்சி காங்கிரஸ். ஆனால், 2014-ல் பா.ஜ.க தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைத்தபோது, காங்கிரஸ் கட்சியால் நாடாளுமன்றத்தில் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என்ற தகுதியைக்கூடப் பெற முடியவில்லை. 2019ஆம் ஆண்டு தேர்தலிலும் அதே நிலைதான். முன்பை விட பல மாநிலங்களில் மேலும் பலவீனமடைந்திருந்தது. தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெற்றிருந்ததால் 9 எம்.பி.க்களைப் பெற்றது. இல்லையென்றால், இங்கும் எண்ணிக்கை இருந்திருக்காது என்பதே உண்மை நிலவரம்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டு ஃபார்முலாபடி நாடு முழுமைக்குமான ஒரு கூட்டணியை கட்டமைக்க தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சியால்தான் இந்தியா கூட்டணி அமைந்தது. அதில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பலவும் காங்கிரஸ் தலைமையேற்பதற்கு தயக்கம் காட்டின. எனினும், அவரவர் மாநிலங்களில் வலிமையுள்ள கட்சிகள் அதிகளவில் போட்டியிடும்படி களத்தை அமைத்துக்கொள்ளவேண்டும் என்கிற மு.க.ஸ்டாலினின் வியூகமே, தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க.வுக்கு தனி மெஜாரிட்டி இல்லாத நிலையை உருவாக்கியது. நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல்காந்தி தேர்வானார். தமிழ்நாடு-புதுவையில் 40க்கு 40 தொகுதிகளையும் தி.மு.க-காங்கிரஸ் ஆகியவை உள்ளடங்கிய இந்தியா கூட்டணி வென்றது.
இதுபோன்ற வெற்றியைக்கூட அதன்பின் நடந்த எந்த மாநிலத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை. பா.ஜ.க.வுக்கு நேரடி போட்டியாக காங்கிரஸ் மட்டுமே உள்ள குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரசால் வெற்றி பெற்று ஆட்சியமைக்க முடியவில்லை. பீஹார் தேர்தலில் ஆர்.ஜே.டி. கூட்டணியில் அதிக இடங்களை வாங்கி படுதோல்வியடைந்தது காங்கிரஸ். உத்தரபிரதேசம், மகாராஷ்ட்ரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எத்தனையாவது இடத்தில் இருக்கிறது என்பதுகூட தெரியாது.
ஒருகாலத்தில் இந்தியாவையே கட்டி ஆண்ட காங்கிரஸ் தற்போது கர்நாடகா, தெலங்கானா, இமாசலப்பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் இருக்கிறது. கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான் காங்கிரஸ் கதை. தமிழ்நாட்டிற்கு அருகிலுள்ள புதுச்சேரியில் தொடர்ந்து பல முறை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அங்கும்கூட எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த கட்சியாக செல்வாக்கின்றி இருக்கிறது. தி.மு.க. தயவிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது.
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சிக்கு வலிமையான கட்டமைப்போ மாநிலத் தலைமையோ கிடையாது. ஒரு சில மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் தங்களுக்குள் போட்டிப் போடுவதில்தான் கவனமாக இருக்கிறார்களே தவிர, கட்சியை வளர்ப்பதிலோ பா.ஜ.க.வுக்கு சவாலாக மாற்றுவதிலோ கவனம் செலுத்துவதில்லை.
பா.ஜ.க. ஆட்சியில் சிறுபான்மை மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவும் நிலையில், மதநல்லிணக்கத்தையும் தேச ஒற்றுமையையும் விரும்பும் மக்களின் தேர்வாக காங்கிரஸ் இருக்கிறது. மக்கள் தயாராக இருந்தாலும், அதற்கேற்ப தன்னை வளர்த்துக்கொள்ள காங்கிரஸ் தலைமை தயாராக இல்லை. மாநிலத்தில் உள்ளவர்கள் தங்களின் சுயலாபங்களுக்காக இங்கே போகலாமா, அங்கே போகலாமா என்பதிலேயே கவனமாக இருக்கிறார்கள்.
மாநிலக்கட்சிகளான தி.மு.க, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆர்.ஜே.டி ஆகியவற்றிடம் உள்ள உறுதியான பா.ஜ.க. எதிர்ப்பும், மாற்று அரசுக்கான முயற்சியும் காங்கிரஸிடம் இல்லை. வெறும் தேர்தல் கணக்குகளால் காங்கிரஸ் கரையேறிட முடியாது.



