சூடான் நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ராணுவத்திற்கும், ஆர்.எஸ்.எஃப் (RSF) எனப்படும் துணை ராணுவப் படைக்கும் இடையே அதிகாரத்தைக் கைப்பற்ற கடும் போர் நடைபெற்று வருகிறது. இந்தப் போரின் ஒரு பகுதியாக, வடக்கு டார்பூர் மாகாணத்தின் தலைநகரான எல் பாஷர் நகரைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவத்தினர் தீவிர தாக்குதலை நடத்தி வந்தனர். இந்நிலையில், அக்டோபர் மாதம் இறுதியில் இந்த நகரில் நடந்த கொடூரங்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை (United Nations) தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, அக்டோபர் 25 முதல் 27 வரையிலான வெறும் மூன்று நாட்களில் மட்டும் எல் பாஷர் நகரில் சுமார் 6,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், நகருக்குள் நடந்த தாக்குதல்களில் சுமார் 4,400 பேர் உயிரிழந்த நிலையில், எஞ்சிய 1,600-க்கும் மேற்பட்டோர் உயிர் பிழைக்க வேண்டி நகரை விட்டு வெளியேறி தப்பியோடியபோது, வழியிலேயே வழிமறித்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, அங்குள்ள எல் பாஷர் பல்கலைக்கழக விடுதியில் தஞ்சம் புகுந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அங்கேயே சுமார் 500 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

துணை ராணுவப் படையினர் பொதுமக்களின் குடியிருப்புகள் மற்றும் மருத்துவமனைகளைக் கைப்பற்றி, அவற்றைச் சித்திரவதை முகாம்களாகவும் தற்காலிக சிறைகளாகவும் மாற்றியுள்ளனர். அங்கு பிடிபட்டவர்கள் மீது கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும் அரங்கேறியுள்ளதாக ஐநா சுட்டிக்காட்டியுள்ளது. இது ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என்றும், சர்வதேச சட்டங்களின்படி இது மிகக்கடுமையான போர்க்குற்றம் என்றும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.

சூடான் போரினால் இதுவரை லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வரும் சூழலில், இந்த எல் பாஷர் படுகொலைச் சம்பவம் சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.(Online Tamil News)



