ஏப்ரல் 30ம் தேதிக்கு முன்னர் ஜனநாயகன் பட ரிலீஸ் ஆகாது என்பதால் முன்பதிவு டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படுகின்றன.
மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இருக்கிறது என்று புகார் வந்திருக்கிறது எனச்சொல்லி ஜனநாயகன் படத்தினை மறு ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று தணிக்கை வாரியம் சொன்னது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. உடனே தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு இதை விசாரித்து, தனி நீதிபதி இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.

இது சரிப்பட்டு வராது. இந்த வழியில் சென்றால் இந்த ஜென்மத்திற்கும் படம் ரிலீஸ் ஆகாது என்று நினைத்த தயாரிப்பு நிறுவனம், மறு ஆய்வுக்குழுவை நாடி இருக்கிறது. முன்னதாக நீதிமன்றத்தில் இருந்த வழக்கை வாபஸ் பெற்றிருக்கிறது.
இதையடுத்து மறு தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்க வேண்டும். அதற்காக மறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மறு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு அவர்கள் படம் பார்த்து தணிக்கை சான்றிதழ் அளிக்க உள்ளார்கள்.
இதன் பின்னர் படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என்கிற நிலை இருக்கிறது. அதே நேரம் முழு ஆண்டு தேர்வுகள் மற்றும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால் படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். அப்புறம் படம் மே மாதத்திற்கு பின்னர் தள்ளிப் போய்விடும் நிலை இருக்கிறது.

இப்படி என்றைக்கு ரிலீஸ் என்கிற சந்தேகம் இருப்பதால் ஜனநாயகன் படத்தின் அனைத்து முன்பதிவு டிக்கெட்டுகளையும் ரத்து செய்திருக்கிறது கனடா ஒன்டோரியோவில் இயங்கும் யார்க் சினிமாஸ். அந்த அறிவிப்பில், ’’அன்பான ரசிகர்களே, ஜன நாயகன் திரைப்படம் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு முன்பு வெளியாகாது என்பதை நினைவில் கொள்ளவும். உங்களிடம் ஏதேனும் டிக்கெட்டுகள் நிலுவையில் இருந்து, உங்கள் பணத்தைத் திரும்பப் பெற இன்னும் முடியவில்லை என்றால், அதை விரைவில் ஏற்பாடு செய்ய எங்கள் திரையரங்குகளைத் தொடர்பு கொள்ளவும்.

புதிய வெளியீட்டு தேதி உறுதி செய்யப்பட்டவுடன், எங்கள் விசுவாசமான உறுப்பினர் அனைவருக்கும் முன்னுரிமை முன்பதிவு அணுகல் கிடைக்கும். உங்கள் பொறுமை, புரிதல் மற்றும் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி. உண்மையுள்ள, யார்க் சினிமாஸ் நிர்வாகம்.’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



