தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகையை அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளர் மாணிக்கம் தாகூர், சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும் இதுதான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கட்சிக்குள் பூதாகரமாக வெடித்திருக்கிறது என்றும் பேச்சு எழுந்திருக்கிறது.
திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது கந்தர் மலையா? சிக்கந்தர் மலையா? என்ற சர்ச்சையில் இந்து முன்னணியின் போராட்டங்களுக்கு பதிலடியாக மத நல்லிணக்கத்தை காக்கின்ற வகையில் திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்காவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத வழிபாடு நடத்தப் போவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை.

’’திருப்பரங்குன்றத்தை கலவர பூமியாக மாற்றும் நோக்கில் வெளியூர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து சூழ்ச்சிகளை செய்து வருகிறது பாஜக. ஆன்மிகம் என்பது வேறு அரசியல் என்பது வேறு. அந்த காலத்தில் இருந்து இந்துக்களும் இஸ்லாமியர்களும் பின்னிப்பிணைந்து ஒற்றுமையாக வாழ்ந்து வரும் சூழலில் இதை கெடுக்க நினைக்கிறது பாஜக. அதனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருப்பரங்குன்றம் சென்று முருகன் கோவிலிலும் சிக்கந்தர் தர்காவிலும் சிறப்பு வழிபாடு செய்யப்படும்’’ என்று அறிவித்தார் செல்வப் பெருந்தகை.

அந்த நேரத்தில் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் செல்வப் பெருந்தகையை செல்போனில் தொடர்பு கொண்டு சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சத்தியமூர்த்தி பவனில் உள்ள வார்ரும் வரையில் பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது . தற்போது கூட்டணி விவகாரத்தில் ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலும் சரியாகாது என்று முதலமைச்சர் திட்டவட்டமாக சொல்லிவிட்ட பின்னரும் கூட விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.
திருப்பரங்குன்றத்தில் காங்கிரஸ் கூட்டத்தை நடத்தி பூத் கமிட்டி போடக்கூட காங்கிரஸில் ஆள் இல்லை என்று சொல்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் நாம் எவ்வளவு கூட்டம் இருக்கிறோம் என்பதை திமுகவுக்கு காட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி கூட்டணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார் மாணிக்கம் தாகூர்.

இது தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செல்வப் பெருந்தகை இடம் மாணிக்கம் தாகூர் குறித்து புகார் கடிதங்கள் அளித்திருக்கிறார்கள். அந்த புகார் கடிதங்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவை சந்தித்தார் செல்வ பெருந்தகை. அந்த நேரத்தில் சாதிப் பெயரால் தான் அவதூருக்கு உள்ளானது குறித்தும், மாணிக்கம் தாகூர் மீது மல்லிகார்ஜுன கார்கே இடம் புகார் அளித்திருக்கிறார் செல்வ பெருந்தகை என்கிறது சத்தியமூர்த்தி பவன் வார்ரூமில் இருந்து வரும் தகவல்கள்.



