கடைசி நேர திருப்பமாக திமுக கூட்டணிக்குள் வந்துவிட்டது தேமுதிக. இதன் மூலம் திமுக கூட்டணி மேலும் வலுப்பெற்றிருக்கிறது.
கட்சி தொடங்கிய 20 ஆண்டுகளில் முதன் முறையாக திமுக கூட்டணியில் இணைந்திருக்கிறது தேமுதிக. 2011ல் இருந்து அதிமுக கூட்டணியில் பயணித்து வந்தது. 2016ல் கலைஞரின் முயற்சியில் திமுக கூட்டணியில் இணைய இருந்தார் விஜயகாந்த். அதிமுக கூட்டணியில் இருந்து திமுகவுக்கு தேமுதிக வருகின்றது என்கிற நம்பிக்கையில், ’பழம் நழுவி பாலில் விழும்’ என்று கலைஞரும் சொன்னார். ஆனால், கடைசி நேர திருப்பமாக வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்டுகள் முன்னெடுப்பில் மூன்றாவது அணியாக உருவெடுத்திருந்த ’மக்கள் நல கூட்டணி’க்கு சென்றுவிட்டார் விஜயகாந்த். அக்கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கினார்.

2016ல் நழுவிய அந்த பழம் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று பாலில் விழுந்திருக்கிறது. என்.டி.ஏ. கூட்டணிக்குள் செல்லும் நிலையில் இருந்த தேமுதிகவை திமுக கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்த கூட்டணி பேச்சுவார்த்தையின் பின்னணியில் அமைச்சர் எ.வ.வேலுவின் பங்களிப்பு அதிகம் என்கிறது அறிவாலயம்.
கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னர் ‘சகோதரர் கேப்டன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ‘அண்ணன் ஸ்டாலின்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்.

கூட்டணியை உறுதி செய்ய பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ’’முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!
சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் ,அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.

கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு – நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்! திராவிட மாடல்l ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!’’என்று குறிப்பிட்டிருக்கிறார்.
அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், ‘’நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் விருப்பத்தின் பேரில் இன்று கூட்டணி அமைந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பே கேப்டன் இருக்கும் போதே அமைந்திருக்க வேண்டிய கூட்டணி இது. கேட்படன் இல்லாத நேரத்தில் தேமுதிகவை அரவணைத்திருக்கிறார் அண்ணன் ஸ்டாலின். இந்த கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும்’’ என்கிறார். தனது எக்ஸ் தள பக்கத்திலும், ‘’முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவர் நமது தலைவர் ‘கேப்டன்’ விஜயகாந்த் . திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்!’’ என்று பதிவிட்டிருக்கிறார்.
கோயம்பேட்டில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், ‘’பழம் நழுவி தேன் கலந்த பாலில் விழுந்துள்ளது’’என்கிறார் பிரேமலதா.

ஒருவழியாக மக்கள் நல கூட்டாளிகளுடன் இணைந்திருக்கிறது தேமுதிக என்றே சொல்லலாம். மக்கள் நல கூட்டணியில் இருந்த வைகோ, திருமாவளவன், கம்யூனிஸ்ட்டுகள் எல்லாமே இன்றைக்கு திமுக கூட்டணியில்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ”திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது தித்திப்பானது’’ என்கிறார் வைகோ.



