அதிமுகவில் இடமில்லாததால் அ.இ.பு.ம.மு.க. தொடங்கினார் சசிகலா. அன்புமணி தனது மெஜாரிட்டியை காட்டி அதிமுக கூட்டணியில் இணைந்துவிட்டார். தனித்து விடப்பட்ட ராமதாசும் சசிகலாவும் இணைந்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இணைந்துள்ளதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதை இருவரும் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள்? சசிகலா ஏற்றுக்கொள்ளப் போகிறாரா? ராமதாஸ் கைவிடப் போகிறாரா?
அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி இதுகுறித்து, ‘’சசிகலா மற்றும் ராமதாஸ் ஆகிய இருவருமே தங்கள் சமுதாய பலத்தை வைத்தே தேர்தலில் இணைந்து களம் காண்கிறார்கள். ஆனால் திரு ராமதாஸ் அவர்களை பொறுத்தவரை 10.5% உள் ஒதுக்கீடு வன்னியர்களுக்கு தேவை என்பதுதான் அவருடைய பிரதான நோக்கமும், போராட்டமும்.

ஆனால் முக்குலத்தோருக்கு அந்த 10.5% உள் ஒதுக்கீடு என்பது எதிரானதாக அமையும் எனவே அதைக் கொடுக்கக் கூடாது என்பது முக்குலத்தோரின் நிலைப்பாடு. கடந்த தேர்தலில் இந்த எதிரும் புதிருமான நிலைப்பாடுகளே வெற்றி வாய்ப்புகளை பாதித்தது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் தேர்தல் களத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலம் 10.5% உள் ஒதுக்கீட்டை சசிகலாவும் முக்குலத்தோறும் ஏற்றுக்கொள்கிறார்களா? அல்லது ராமதாஸ் அந்த 10.5% உள் ஒதுக்கீட்டுக் கொள்கையை கைவிடப் போகிறாரா?
சசிகலாவுக்கு தனது அக்கா மகன் தினகரன் மீது இருக்கும் கோபத்தையும், ராமதாஸ் அவர்களுக்கு தனது மகன் அன்புமணி மீது இருக்கும் கோபத்தையும் வெளிக்காட்டுவதற்காக மட்டுமே இருவரும் தேர்தல் களம் காண்கிறார்கள் என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு புரிந்து இருக்கிறார்கள்’’என்கிறார்.



