எவ்வளவு பெரிய வசதியான வாழ்க்கை இருந்தாலும் உங்களுக்காக எல்லாத்தையும் தூக்கி எறிந்துவிட்டு வந்திருக்கிறேன். அத்தனை வலிகளையூம் தாங்கிக்கொண்டு உங்களுக்காக மட்டுமே வந்திருக்கிறேன் என்று வாய்நிறைய விஜய் சொன்னாலும் முதல் நாளிலேயே ரொம்பவே திணறிப்போயிருகிறார் விஜய். முதல் நாள் பிரச்சாரமே படு சொதப்பலாகி இருக்கிறது.
சென்னையில் இன்று வில்லிவாக்கம், பெரம்பூர், கொளத்தூர், சிட்கோ நகர் ஆகிய இடங்களில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தார். திட்டமிட்டபடி பெரம்பூர், கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் விஜய். கொளத்தூரில் பேசியபோது ஆடியோ குளறுபடியால் 4 நிமிடம் மட்டுமே பேசிவிட்டு சென்றுவிட்டார் விஜய். அதுவும் கொளத்தூரில் வேட்பாளர் பெயரை மாற்றி பேசி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் விஜய்.

அடுத்து வில்லிவாக்கத்தில் ஆதவ் அர்ஜூனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வதாக இருந்தார். ஆனால் திட்டத்தை ரத்து செய்துவிட்டு நேரடியாக நீலாங்கரை வீட்டுக்கு சென்றுவிட்டார் விஜய்.
பிரச்சார பயணத்தை விஜய் பாதியில் நிறுத்தியது ஏன்? என்பது குறித்து தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் விளக்கம் அளித்திருக்கிறார்.
’’பிரசாரத்திற்கு முறையாக அனுமதி பெற்றும் ஒரு பிரசார இடத்தில் இருந்து இன்னொரு பிரசார இடத்திற்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் செல்லும் வழியில், காவல்துறை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதல் கொஞ்சம்கூட இல்லாததால் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அவர்களது பிரசார வாகனம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இயலாத பாதுகாப்பற்ற சூழல் உருவாக்கப்படுகிறதா? என்கிற ஐயம் ஏற்படுகிறது.

சென்னை மாநகர காவல்துறையின் இத்தகைய, ஒருதலைபட்சமான நடவடிக்கைகளின் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைபடுத்துதலை உடனடியாக மேற்கொள்ள அறிவுறுத்த வேண்டும். அவ்வாறு செயல்படாத அதிகாரிகள் மீது துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
அத்தோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவருக்கு அனுமதி மறுத்துவிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு மட்டும் ஒருதலைபட்சமாக திறந்தவெளி வாகன பிரசாரத்திற்கு அனுமதி அளித்திருப்பது ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் செயலாகும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரின் பிரசார செயல்பாடுகள் சார்ந்த அரசின் பொறுப்புகளை தட்டிக்கழித்து, முறையாக பிரசாரங்களை மேற்கொள்ளும் சூழலை முடக்க துணைபோகும் அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களது தமிழகம் முழுவதற்குமான முதற்கட்ட பிரசாரமாக சென்னை பெரம்பூரில் துவங்கப்பட்ட நிலையில், அங்கே நடந்த வேட்புமனுத் தாக்கல் மற்றும் பிரசாரத்திற்குச் செயல்படுத்தப்பட்டதுபோல, தன்னிச்சையாக இந்த பிரச்சாரங்களுக்குக் கலந்துகொள்ள வரும் பொதுமக்களுக்கும் அந்த இடங்களுக்குச் செல்லும் வழிகளில் தன்னிச்சையாகத் திரளும் பொதுமக்களுக்கும் சரியானப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து முறைப்படுத்துதல், முன்னெச்சரிகை நடவடிக்கைகளைக் கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசார கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் மட்டுமல்லாமல், அங்கே செல்வதற்கான வழிகளிலும் சென்னைப் பெருநகர காவல்துறை செயல்படுத்தாததால் தமிழக வெற்றிக் கழக தலைவர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வில்லிவாக்கம் தொகுதி தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை ரத்து செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்..’’



