தமிழகத்தின் தேனி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட 31 வயதான ரினி சம்பத், அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசியின் மேயர் தேர்தலில் போட்டியிடுகிறார். இதன் மூலம் வாஷிங்டன் டிசி மேயர் பதவிக்கு போட்டியிடும் முதல் தெற்காசியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். தனது 7-ஆவது வயதிலேயே அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்த ரினி, கடந்த பத்து ஆண்டுகளாக வாஷிங்டன் டிசியில் வசித்து வருகிறார்.

இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதியைப் பெற 4,500 வாக்காளர்களின் கையெழுத்துகளை அவர் திரட்டியுள்ளார், இது தேவையான எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். அமெரிக்க அரசாங்கத்தில் தெற்காசிய மக்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் களம் இறங்கியுள்ள ரினி சம்பத், மக்களின் அன்றாடத் தேவைகளான சாலை வசதி, சீரான குடிநீர் விநியோகம், கழிவுநீர் மேலாண்மை மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது போன்ற அடிப்படை அம்சங்களை முன்னிறுத்தித் தனது பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.

வரும் ஜூன் 16-ஆம் தேதி நடைபெறவுள்ள முதன்மைத் தேர்தலில் வெற்றி பெற்றால், நவம்பர் மாதம் நடைபெறும் இறுதி மேயர் தேர்தலில் அவர் போட்டியிடுவார். அமெரிக்கக் கனவைத் தேடி வந்த ஒரு தமிழ்ப் பெண், இன்று அந்நாட்டின் அதிகார மையத்தின் மேயர் பதவிக்குப் போட்டியிடுவது உலகத் தமிழர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.(Online Tamil News)


