பாலிவுட் திரையுலகின் ‘மெலடி கிங்’ என்று அழைக்கப்படும் அர்ஜித் சிங், ஆஷிகி 2 படத்தின் ‘தும் ஹி ஹோ’ பாடல் மூலம் புகழ்பெற்றார். மேலும்,தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ’24’ திரைப்படத்தில் ‘நான் உன் அழகினிலே’ என்ற பாடலின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார். இந்நிலையில், இவர் தனது கரியரின் உச்சத்தில் இருக்கும்போதே, புதிய திரைப்படப் பாடல்கள் பாடுவதை (Playback Singing) நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

அர்ஜித் சிங் (Arijit Singh) தனது சமூக வலைதள பதிவில், “இனி நான் புதிய ப்ளேபேக் பாடல்கள் பாடப்போவதில்லை. இது எனக்கு ஒரு அருமையான பயணம்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு வெளியானதும், அவரது ரசிகர்கள் கவலையும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.இந்த முடிவுக்குப் பின்னணி குறித்து அர்ஜித் விளக்கியதாவது, தொடர்ந்து வேலை செய்வதால் மனதில் சோர்வு ஏற்பட்டதாகவும், இசையில் புதிய மாற்றங்களை தேட வேண்டும் என்ற எண்ணம் வந்ததாகவும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், முழுமையாக இசையிலிருந்து விலகப் போவதில்லை என்றும் அர்ஜித் தெளிவுபடுத்தியுள்ளார். அவர் தனிப்பட்ட முறையில் இசை உருவாக்கவும், இயற்கையான மற்றும் சுயமான இசைக்கு திரும்பவும் விரும்புகிறார். மேலும், ப்ளேபேக் பாடல்களைத் தவிர்த்து, வேறு இசை முயற்சிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், ப்ளேபேக் பாடல்களில் புதிய பணிகளை நிறுத்தினாலும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட பாடல்களை முடிப்பார் என்றும், இசை நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட இசைப் பயணத்தை தொடர்ந்து மேற்கொள்வார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மொத்தத்தில், அர்ஜித் சிங்கின் இந்த முடிவு அவரது இசைப் பயணத்தின் புதிய அத்தியாயமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அவரின் குரலை அடிக்கடி கேட்க பழகிய ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு ஒரு பெரிய வருத்தமாக அமைந்துள்ளது.(Online Tamil News)


