உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இருந்த சீனா(China), தற்போது கடுமையான மக்கள் தொகை சரிவை எதிர்கொண்டு வருகிறது. சீன அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மக்கள் தொகை தொடர்ந்து 4-வது ஆண்டாக சரிந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் சீனாவின் மொத்த மக்கள் தொகை, கடந்த ஆண்டை விட சுமார் 30 லட்சம் குறைந்து 140 கோடியே 40 லட்சமாக பதிவாகியுள்ளது.
இதில் மிகவும் கவலைக்கிடமான விஷயம் பிறப்பு விகிதத்தின் வீழ்ச்சி. கடந்த ஆண்டு சீனாவில் 79 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் குறைவு ஆகும். கடந்த 77 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த பிறப்பு விகிதம் இதுவென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலைமை, சீனாவின் எதிர்கால பொருளாதாரம் மற்றும் தொழிலாளர் பலத்தைப் பற்றி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில், (China’s population)மக்கள் தொகையை அதிகரிக்க சீன அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கெனவே “ஒரு தம்பதி – ஒரு குழந்தை” என்ற கட்டுப்பாடு முழுமையாக கைவிடப்பட்டுள்ளது. தற்போது குழந்தைப் பிறப்பை ஊக்குவிக்க, குழந்தை வளர்ப்புக்கான நிதியுதவி, வீட்டு வசதி சலுகைகள், வரி விலக்குகள் போன்ற பல உதவிகள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில், 2026 ஜனவரி முதல் கர்ப்பத்தடை சாதனங்களுக்கு 13% வரி விதிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை சரிவுக்கு முக்கிய காரணமாக, திருமணங்களின் குறைவு சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், அதிக வாழ்க்கைச் செலவு, வேலைவாய்ப்பு பற்றாக்குறை, பொருளாதார மந்தநிலை மற்றும் இளைஞர்களின் மாறிவரும் சமூக மனப்பான்மை ஆகியவை திருமண எண்ணிக்கையை குறைத்துள்ளன. குறிப்பாக 2024ஆம் ஆண்டில் திருமணங்கள் சுமார் 20% வரை சரிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.(Online Tamil News)
ஆனால் தற்போது அரசு எடுத்துள்ள புதிய நடவடிக்கைகள் பலன் தரத் தொடங்கியுள்ளதாக தெரிகிறது. 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும், சீனாவில் திருமணப் பதிவுகள் 8.5% அதிகரித்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. மே 2025ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விதியின் படி, தம்பதிகள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லாமல், தற்போது வசிக்கும் இடத்திலேயே திருமணத்தை பதிவு செய்யலாம். இது இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த மாற்றங்கள் திருமண சந்தையிலும் பிரதிபலிக்கின்றன. திருமண ஆடைகள், அலங்காரப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். திருமண நிகழ்ச்சிகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்துபவர்களும் தங்களின் வருவாய் உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறாக, சீன அரசு மேற்கொண்டு வரும் இந்த ‘மக்கள் பெருக்கத் திட்டங்கள்’ நீண்ட காலத்தில் வெற்றி பெறுமா, அல்லது சமூக–பொருளாதார சவால்கள் இதனை மீறுமா என்பது எதிர்காலத்தில் தான் தெளிவாகும். இருப்பினும், மக்கள் தொகை சரிவை கட்டுப்படுத்த சீனா தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது என்பது உறுதி.


