முதல் மாநாட்டில் இருந்து நேற்று வரைக்கும் கொள்கை எதிரி என்று சொன்ன பாஜகவுடன் திடீரென்று விஜய் கைகோர்க்கப் போகிறார் என்று தெரிந்ததும் கதி கலங்கிப் போய் இருக்கிறார்கள் தவெக நிர்வாகிகள்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று ஆஃபர் அறிவித்தும் எந்த கட்சியும் கூட்டணிக்கு வராததால் ஏமாற்றமடைந்த விஜய் கடைசியில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு எடுத்து விருப்ப மனு தாக்கல் தொடங்க அறிவித்திருந்தார். அதன்படி விருப்ப மனு தாக்கல் செய்தவரிடம் ஆன்லைனிலேயே நேர்காணல் நடந்தது. இந்த நேர்காணலில் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் விஜய் கலந்து பேசி அதில் முதற்கட்டமாக 60 வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளார்.

இந்த நிலையில் தான் திடீரென்று தவெகவில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் தேசிய ஜனநாயக கூட்டணி தான். அதிமுகவும் பாஜகவும் இணைந்ததும் அடுத்து நமது ஆட்சி தான் என்று இரு தரப்பினரும் கொண்டாடி வந்தார்கள். அவர்கள் நினைத்தது மாதிரி கள நிலவரம் இல்லை, கள நிலவரம் எல்லாம் திமுக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது. அதனால் தான் திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறவில்லை. மாறாக தேமுதிக போன்ற கட்சிகள் கூட்டணிக்குள் வந்திருக்கின்றன. திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாக தெரிந்ததால் தான் ஓபிஎஸ் உட்பட பலரும் திமுக பக்கம் வந்தார்கள். இதில் தேசிய ஜனநாயக கட்சி கடும் அதிர்ச்சி அடைந்தது.

தோற்றாலும் அது படுதோல்வியாக அமைந்துவிடக் கூடாது. திமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்றாலும் தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வி அடைந்தது என்பது என்ற நிலையை அடைந்து விடக்கூடாது. அதற்கு கூட்டணியை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்று விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலம் விஜய்யிடம் பேச்சு நடந்தது. தனித்து நின்றால் இப்போதைக்கு உங்களின் முதல்வர் கனவு நிறைவேறாது. உங்களை மாதிரியே என் சகோதரர் சிரஞ்சீவியும் முதல்வர் கனவில் தனித்து நின்றார். நானும் அப்படித்தான் முதல்வர் கனவில் தனித்து நின்றேன். ஆனால் அது சாத்தியமாகாது என்பது தெரிந்ததும் என் மனதை பக்குவப்படுத்திக் கொண்டு கூட்டணியில் வந்து இன்றைக்கு ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சர் ஆக உள்ளேன். உங்களுக்கும் அப்படி ஒரு பொன்னான வாய்ப்பு வருகிறது. இதை தட்டி கழித்துவிட்டு ஏதோ சில இடங்களில் வென்று ஒரு சிறிய கட்சியாக முடங்கி விடாதீர்கள் என்று ஆசை காட்டி இருக்கிறார். ஆனால் விஜய் அவரின் பேச்சுக்கு கடைசி வரை பிடி கொடுக்கவே இல்லை.

இதன் பின்னர் பியூஸ் கோயல் தவெக தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரயோஜனமில்லை. இதன் பின்னர்தான் பாஜக தனது கடைசி அஸ்திரத்தை எடுத்தது. அந்த அஸ்திரம் சிபிஐ.
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணைக்கு விஜயை வரவைத்து அவரை சிபிஐ வளையத்திற்குள் சிக்கவைத்து விஜயின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட வேண்டும் என்று நினைத்து அதற்கான வேலைகளில் ஆயத்தமானது தேசிய ஜனநாயக கூட்டணியின் டெல்லி தலைமை. உடனே தவெகவின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, விஜய் இடம் பேசி தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் நாம் செல்லாவிட்டால் சிபிஐ பிடி இறுகும். தேர்தலிலேயே நாம் போட்டியிட முடியாத சிக்கல் உருவாகும். அதனால் பாஜக டெல்லி தலைமையின் கட்டளைப்படி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சென்று விடுவது தான் புத்திசாலித்தனம். மற்றபடி நமக்கு தேவையான இடங்களையும் உரிமைகளையும் பேச்சு வார்த்தையில் கேட்டுப் பெறலாம் என்று சொன்னார்.

இதைக் கேட்டதும் ஆத்திரப்பட்ட ஜான் ஆரோக்கியசாமி, அப்படி ஒரு முடிவை எடுத்து விட்டால் நாம் சிறுபான்மையினரின் வாக்குகளை இழக்க நேரிடும். இன்றைக்கு தவெகவிற்கு சிறுபான்மையினர் வாக்கு பலம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் கொள்கை எதிரி என்று நாம் பாஜகவை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதால் தான். இத்தனை காலமும் இப்படி சொல்லிவிட்டு திடீரென்று இப்போது அதே பாஜகவுடன் கைகுலுக்கினால் சிறுபான்மையினர் கடும் அதிர்ச்சி அடைந்து விடுவர். சிறுபான்மையினரின் வாக்குகள் எல்லாம் திமுக கூட்டணிக்கு சென்று விடும். குறிப்பாக பட்டியல் சமூக வாக்குகள் விசிக பக்கம் திரும்பிவிடும் என்று எச்சரித்திருக்கிறார்.

இதைக் கேட்டு என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல் குழம்பிப்போன விஜய், தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை அழைத்து மாவட்ட செயலாளர்களிடம் இது குறித்து பேசி அவர்களின் என்ன ஓட்டங்களை அறிந்து சொல்லுமாறு கூறினார். அத்தனை மாவட்ட செயலாளர்களையும் நேரில் வரவைத்து கருத்து கேட்பதற்கு கால அவகாசமில்லை.
இன்று டெல்லிக்கு செல்ல இருப்பதால் அதற்குள் அவர்களின் முடிவுகளை அறிந்து ஒரு முடிவெடுத்து செல்ல வேண்டும் என்று விஜய் சொன்னதால் நேற்று சென்னையில் இருந்தபடியே தமிழகம் முழுவதும் உள்ள 132 தவெக மாவட்ட செயலாளர்களிடமும் காணொளி வாயிலாக பேச நினைத்தார் ஆனந்த். ஆனால் அதில் பத்துக்கும் மேற்பட்டோர் ஆலோசனையில் பங்கேற்க மறுத்தனர். பெரும்பாலானோர் அந்த ஆலோசனையில் பங்கேற்றபோது எந்த கூட்டணியில் இணைய போகிறோம் என்பதை புஸ்ஸி ஆனந்த் சொல்லாமலேயே தவெக தனித்து போட்டியிடுவது நல்லதா? கூட்டணி அமைத்து போட்டியிடுவது நல்லதா? என்ற கேள்விகளை மாவட்டச் செயலாளர்களிடம் முன் வைத்திருக்கிறார் ஆனந்த்.

எந்தக் கூட்டணி என்று சொல்லாவிட்டாலும் நடப்பு நிலவரங்களை அறிந்து வரும் மாவட்ட செயலாளர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி தான் அது என்பதை மனதில் வைத்தே பேசினார்கள். பெரும்பாலானோர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்வது சரியாக இருக்காது. அதற்கு பேசாமல் தனித்துப் போட்டியிடலாம் என்று சொன்னார்கள். குறிப்பாக சிறுபான்மையினர் வாக்கு வங்கிகளை வைத்திருக்கும் மாவட்டச் செயலாளர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்லக்கூடாது என்று தங்களது கவலையை தெரிவித்தார்கள் .
பல மாவட்ட செயலாளர்கள் தலைவர் என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்பட்டு செயல்பட தயார் என்று கூறினார்கள். ஒட்டுமொத்தமாக கூட்டணிக்கு சம்மதம் என்று சொல்லுவார்கள். தலைவர் சொல்வது தான் வேத வாக்கு என்று சொல்வார்கள் என்று நினைத்திருந்தார் ஆனந்த். ஆனால் பெரும்பாலானோர் கூட்டணிக்கு செல்லக்கூடாது. அதாவது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்லக்கூடாது என்று சொன்னதால் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழம்பிப் போனார் ஆனந்த்.

மாவட்ட செயலாளர்களிடம் கலந்து பேசிய விவரங்களை விஜயிடம் நேரில் தெரிவித்தார் ஆனந்த். அதை கேட்டு மேலும் குழம்பிப் போன விஜய், என்ன செய்வதென்று முடிவெடுக்க முடியாமலேயே குழப்பத்துடன் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.



