காணும் பொங்கலை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாடுகளை அடக்கும் ஜல்லிக்கட்டு நடந்து வருவது வழக்கம். பல இடங்களில் சேவல் சண்டை, ஆடு சண்டையும் நடத்தி வருகிறார்கள்.
சேலம் மாவட்டத்து மக்கள் இந்த நாளில் நரி ஜல்லிக்கட்டு கொண்டாடி வருகிறார்கள். கொட்டவாடி, ஆத்தூர், வாழப்பாடி மக்கள் இந்த ஜல்லிக்கட்டை வெகு விமரிசையாக நடத்தி வருகின்றனர்.

காட்டுக்குள் சென்று வங்காநரியை பிடித்து வந்து ஜல்லிக்கட்டு நடத்தினால் விவசாயம் செழிப்பாக இருக்கும். ஆரோக்கியமாக வாழலாம் என்று அம்மக்கள் நம்பி வருகிறார்கள்.
இதற்காக காட்டுக்குள் சென்று வங்கா நரியை பிடித்து வந்து அலங்கரித்து, ஊருக்குள் நடுவில் வைத்து வணங்கிவிட்டு, பின்னர் ஓட விடுகின்றனர். அந்த நரியை பிடிப்பதுதான் ஜல்லிக்கட்டு. காளை ஜல்லிக்கட்டை போலவே இந்த ஜல்லிக்கட்டுக்காக பலமாதங்களுக்கு முன்பிருந்தே இளைஞர்கள் தயாராகி வருகின்றனர்.

ஜல்லிக்கட்டின் போது நரி கடித்துவிடக்கூடாது என்பதற்காக அதன் வாய் மற்றும் பின்னங்காலை கயிற்றால் கட்டி விடுகின்றனர். ஜல்லிக்கட்டு முடிந்ததும் அந்த நரியை மீண்டும் காட்டுக்குள் சென்று விட்டுவிடுகின்றனர்.
பல நூறு ஆண்டுகளாக இந்த ஜல்லிக்கட்டு நடந்து வந்த நிலையில், காட்டில் வாழும் விலங்குகளை பிடித்து வந்து வாய், காலை கட்டி துன்புறுத்துவதற்கு எதிராக புகார்கள் குவிந்ததால் இந்த ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் தடையை மீறி பல இடங்களில் நரி ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.



