கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, இன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாகச் சரிந்துள்ளது.

சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தங்கம் மீதான முதலீடுகள் குறைந்ததன் எதிரொலியாக, இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.7,600 வரை குறைந்து நகைப்பிரியர்களுக்குப் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு ஒரு சவரன் தங்கம் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்றைய இந்தத் திடீர் சரிவு தங்கம் வாங்கக் காத்திருப்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, சென்னையில் காலையில் கிராமுக்கு ரூ.670 குறைந்து ஒரு சவரன் ரூ.1,03,600-க்கு விற்பனையான நிலையில், பிற்பகலில் மேலும் ரூ.2,240 சரிந்தது. இதன் மூலம் இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.7,600 குறைந்து, தற்போது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,01,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த திடீர் சரிவுக்கு உலகளாவிய பொருளாதாரக் காரணிகளே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலரின் மதிப்பு சர்வதேசச் சந்தையில் எதிர்பாராத விதமாக வலுவடைந்து வருவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதைக் குறைத்து டாலர் மற்றும் இதர கடன் பத்திரங்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றங்கள் தணிந்து வருவதாக வெளியாகும் தகவல்களும், உலகச் சந்தையில் தங்கத்தின் தேவையைத் தற்காலிகமாகச் சரித்துள்ளன. இந்த சர்வதேசக் காரணிகளே இன்றைய அதிரடி விலை வீழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் ரகசியமாகும்.(Online Tamil News)


