குஜராத் மாநிலம் மெக்சானா (Mehsana) மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மிபுரா கிராமத்தில் மனதை உலுக்கும் ஒரு தீ விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ஒரு பட்டறையில் தொழிலாளர்கள் சேலைகளை மடித்து பேக் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சேலைகளை மடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஃபோம் ஷீட்கள் (Foam Sheets) திடீரென தீப்பிடித்து எரிந்தன. ஃபோம் ஷீட்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய தன்மை கொண்டவை என்பதால், தீ கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பகுதி முழுவதும் பரவிyஉள்ளது. இதனால் அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் தீயிலும் புகையிலும் சிக்கிக்கொண்டனர்.
இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் ஒரு சிறு குழந்தையும் அடங்கும் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
மின் கசிவு காரணமாகவோ அல்லது கவனக்குறைவு காரணமாகவோ இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலாளர் பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.(Online Tamil News)


