ஐம்பது ஆண்டுகளுக்கு பின்னர் நிலவுக்கு மனிதர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். நான்கு விண்வெளி வீரர்களுடன் விண்கலத்தை அனுப்புகிறது நாசா. இதற்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, கடந்த 1968 முதல் 1972 வரையிலும் அப்பல்லோ திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பியது. இதில் 12 பேர் நிலவின் மேற்பரப்பில் இறங்கினர்.

50 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. இதற்காக ஆர்டெமிஸ் -2 விண்கலத்தினை விண்வெளிக்கு அனுப்புகிறது நாசா. இது நிலவுக்கு அருகில் சென்றுவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும். இதற்காக ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புவதற்கான கவுன்ட் டவுன் ஒத்திகையினை கடந்த 1ம் தேதி தொடங்கிவிட்டது நாசா.
ராக்கெட் மற்றும் விண்கலத்தில் உள்ள நைத்டு தொழில்நுட்ப கருவிகளும் சரியாக செயல்படுகிறதா? இரண்டும் மனிதர்களை சுமந்து செல்ல பாதுகாப்பானதாக இருக்கிறதா? என்றும் ஒத்திகையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த ஒத்திகை வெற்றி பெற்றால் வரும் 6ம் தேதி அன்று ராக்கெட் ஏவப்படும். வானிலை மாற்றம் காரணமாக அன்று ஏவ முடியாவிட்டால் 7,8,10,11 ஆகிய தேதிகளில் ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளன.

ரீட் வைஸ்மேன், கிறிஸ்டினா கோச், விக்டர் க்ளோவர், ஜெர்மி ஹேன்சன் ஆகிய 4 விண்வெளி வீரர்களும் கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இதில் கிறிஸ்டினா கோச் என்பவர் நிலவுக்குச் செல்லும் முதல் பெண் ஆவார். விக்டர் க்ளோவர் என்பவர் நிலவுக்குச் செல்லும் முதல் கறுப்பினத்தவர் ஆவார். ஜெமி ஹேன்சன் என்பவர் நிலவுக்குச் செல்லும் முதல் அமெரிக்க அல்லாதவர். இவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர்.
53 ஆண்டுகளுக்கு பின்னர் பூமியின் சுற்றுப்பாதையை தாண்டி ஆழமான விண்வெளிக்கு மனிதர்கள் செல்லும் நிகழ்வு என்பதால் உலகம் முழுவதிலும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருக்கிறது நாசாவின் இந்த முயற்சி.



