இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே எட்டப்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தில், விவசாயப் பொருட்கள் தொடர்பான பிரிவில் அமெரிக்கா சில முக்கியமான மாற்றங்களைச் செய்துள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட அறிக்கையில், அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகளுக்கான வரியை இந்தியா குறைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இது இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்று எழுந்த கவலைகளால், புதிய திருத்தப்பட்ட அறிக்கையில் அந்தப் பகுதி முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. மேலும், ‘விவசாயப் பொருட்கள்’ என்ற பொதுவான சொல்லுக்குப் பதிலாக, இப்போது ‘தொழில்துறை பொருட்கள்’ மற்றும் ‘உணவுப் பொருட்கள்’ என்று பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
வர்த்தக இலக்கு மற்றும் டிஜிட்டல் வரி மாற்றங்கள்
அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இந்தியா வாங்கும் என்று முன்பு கூறப்பட்டிருந்தது ஒரு கட்டாய ஒப்பந்தம் போலத் தெரிந்தது. ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள திருத்தத்தின்படி, இந்தியா அந்தப் பொருட்களை ‘வாங்க விரும்புகிறது’ என்று மாற்றப்பட்டுள்ளது. இது இந்தியாவின் மீதான வர்த்தக அழுத்தத்தைக் குறைக்கிறது. அதேபோல், இந்தியாவில் உள்ள கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் ‘டிஜிட்டல் சேவை வரி’யை இந்தியா நீக்க வேண்டும் என்று அமெரிக்கா (America) முன்பு வலியுறுத்தியது. ஆனால், புதிய ஒப்பந்தத்தில் அந்த வரி நீக்கம் பற்றி உறுதியாகக் கூறாமல், அது குறித்து இரு நாடுகளும் ஆலோசித்து முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
ரஷ்ய எண்ணெய் இறக்குமதி மற்றும் வரிச் சலுகைகள்
உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெயை அதிகளவில் வாங்கி வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது ரஷ்ய எண்ணெயை வாங்குவதை இந்தியா படிப்படியாகக் குறைக்கும் என்று உறுதியளித்துள்ளது. இதற்குப் பிரதிபலனாக, இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்திருந்த 25 சதவீத கூடுதல் வரியைத் திரும்பப் பெறச் சம்மதித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கான வரி 18 சதவீதமாகக் குறையும். இந்த முக்கிய மாற்றங்களுடன் கூடிய வர்த்தக ஒப்பந்தம் வரும் மார்ச் மாத நடுப்பகுதியில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.(Online Tamil News)


