பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ (ISI) உளவு அமைப்பிற்கு இந்தியக் கடற்படை தொடர்பான ரகசியத் தகவல்களைக் கசியவிட்டதாக, ஆக்ராவைச் சேர்ந்த 24 வயது கடற்படை வீரர் ஆதர்ஷ் குமார் என்பவரை உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் பிரிவு (UP ATS) அதிரடியாகக் கைது செய்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தெற்கு கடற்படை தலைமையகத்தில் பணியாற்றி வந்த இவர், சமூக வலைதளம் வாயிலாக பாகிஸ்தான் பெண் உளவு முகவர் ஒருவரின் ‘ஹனி டிராப்’ வலையில் சிக்கியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுமார் மூன்று ஆண்டுகளாக அந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஆதர்ஷ் குமார், இந்தியக் கடற்படைக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் முக்கிய கடற்படை தளங்களின் புகைப்படங்கள் மற்றும் வரைபடங்களை ரகசியமாகப் பகிர்ந்துள்ளார். இதற்காக அவர் பல்வேறு கட்டங்களாகப் பணம் பெற்றுள்ளதும் அவரது வங்கிப் பரிவர்த்தனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடமிருந்து மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், வேறு என்னென்ன முக்கியத் தகவல்கள் கசிந்துள்ளன என்பது குறித்தும் பாதுகாப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.(Online Tamil News)


