இந்தியப் பங்குச்சந்தை இன்று வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சுமார் 2,400 புள்ளிகளுக்கு மேல் அதிரடியாகக் குறைந்ததால், 77,000 புள்ளிகளுக்கும் கீழே சென்றது.

அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 23,800 என்ற நிலைக்குக் கீழ் இறங்கியது. இந்தத் திடீர் சரிவின் காரணமாக, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் வரை குறைந்து, முதலீட்டாளர்களுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வரலாற்றுச் சரிவுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றமே மிக முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் சூழலால் உலகளாவிய சந்தைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, இந்தியச் சந்தையையும் கடுமையாகப் பாதித்துள்ளது. இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 115 டாலரைத் தாண்டியதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹92.30 ஆகச் சரிந்ததும் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக வங்கி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலோகத் துறை சார்ந்த முன்னணி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்ததால், முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளைப் போட்டி போட்டுக்கொண்டு விற்பனை செய்து வருகின்றனர். அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய சந்தையிலிருந்து வெளியேறி வருவதால், வரும் நாட்களிலும் இந்த ஏற்ற இறக்கம் நீடிக்கும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.(Online Tamil News)


