மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. துபாய் கடற்பரப்பில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த குவைத் நாட்டிற்குச் சொந்தமான ‘அல்-சல்மி’ (Al Salmi) என்ற பிரம்மாண்ட கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் மீது ஈரான் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலால் கப்பலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதோடு, கப்பலின் அடிப்பகுதியும் சேதமடைந்தது. தகவலறிந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நல்வாய்ப்பாக, கப்பலில் இருந்த 24 பணியாளர்களும் காயமின்றி உயிர் தப்பியதாக குவைத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், கப்பல் சேதமடைந்துள்ளதால் கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்பு உண்டாகும் அபாயம் நிலவுகிறது.
இந்தத் தாக்குதல் ஒருபுறம் இருக்க, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு மேலும் தீவிரமடைந்துள்ளது. ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு (Kharg Island) மீது தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு முன்வராவிட்டால், அதன் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகள் அழிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரும் சூழல் உருவாகியுள்ளது.

இதற்கிடையே, குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கு மீதும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில ட்ரோன்களை குவைத் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்திய போதிலும், மற்றவை இலக்கைத் தாக்கியதில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. (Online Tamil News)


