அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மற்றும் லெபனான் மீது நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் மிக உயரிய தலைவரான அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகன் முஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான், அண்டை நாடுகளான துபாய், குவைத், பக்ரைன் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக அமீரகத்தின் மீது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தச் சூழலில், இந்தியப் பெருங்கடலில் இலங்கைக் கடல் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்த ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் பயங்கரத் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் நிலைைகுலைந்த ஈரானியக் கப்பல் கடலில் மூழ்கி வரும் நிலையில், அதில் இருந்த 101 வீரர்கள் மாயமாகியுள்ளனர். மேலும் படுகாயமடைந்த 50ற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (Online Tamil News)


