அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக அளிக்கும் இலவசங்கள் நீண்ட கால பொருளாதார வளர்ச்சிக்கு எதிரானது என்று விமர்சித்து ’சர்க்கார்’ படத்தில் நடித்த விஜய் இன்றைக்கு அரசியல்வாதி ஆனதும் அவரே இலவசங்களை வாக்குறுதிகளாக அறிவிக்கிறார்.
சர்க்கார் படத்தில் மட்டுமல்லாது தவெக மேடைகளிலும் இலவசங்களுக்கு எதிராக முழங்கினர் தவெகவின் நிர்வாகிகள். தவெகவின் கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், கட்சியில் இணைவதற்கு முன்பாகவே, ’’மக்கள் சுய உழைப்பில் வாழ வேண்டும். மக்களை இலவசங்களுக்கு அடிமையாக்கிவிட்டனர். இலவசங்களை நீக்கி, மக்கள் தன்மானத்துடன் வாழ வழிவகை செய்ய வேண்டும்’’என்று தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் வழங்குவதை விமர்சித்து தனது சமூக தலைவத்தள பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். தவெகவில் இணைந்த பின்னரும் கூட அவர் இதே நிலைப்பாட்டில்தான் இருந்து வருகிறார். கடந்த நவம்பர் மாதத்தில் மாமல்லபுரத்தில் நடந்த தவெக பொதுக்குழுவில் பேசியபோது, ’’இலவச பஸ், பெண்களுக்கு ரூ.1000, பள்ளி மாணவிகளுக்கு ரூ.1000 எல்லாம் உருப்படியான திட்டங்கள் இல்லை. திமுக மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 கொடுப்பதால் அதிமுக ரூ.2000 என்று அறிவிக்கிறது. இதற்கு ஒரு முடிவே இல்லையா?’’ என்று விமர்சித்திருந்தார்.

ஆனால் தவெக தலைவர் விஜய்யோ, தேர்தல் வாக்குறுதிகளாக, தவெக ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத்தொகை ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதற்கு ஒரு முடிவே இல்லையா? என்று கேட்டவர்கள், இப்போது ரூ.2500 என்று அறிவித்தது ஏன்?
மகளிர் விடியல் பேருந்து பயணத்தை இலவச பஸ் என்று விமர்சித்துவிட்டு, தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தும் எந்த மூலைக்கும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று விஜய் அறிவிப்பதை என்னவென்று சொல்வது?
உதவித்திட்டங்களையும், உரிமைத் திட்டங்களையும் இலவசங்கள் என்று கொச்சைப்படுத்தியவர்களே இன்று அந்த இலவசங்களை அறிவிக்கிறார்களே? தாலிக்கு தங்கம் என்பதை கொஞ்சம் மாற்றி அண்ணன் சீர், தாய்மாமன் சீர் என்று அறிவித்திருக்கிறார் விஜய்.

இல்லம் தேடி போன்ற திட்டங்களின் மூலம் தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கல்வியில் இடைநிற்றலே இல்லை என்று மத்திய அரசின் கல்வித்துறை அமைச்சகமே ஆய்வறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆனால், ’’1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் கல்வி இடைநிற்றலை தடுக்க மாணவர்களின் தாய் அல்லது பாதுகாவலருக்கு காமராஜர் கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ரூ.15,000 வழங்கப்படும்’’ என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருக்கிறார் விஜய்.
தஞ்சாவூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், மீனவர்களின் பிரச்சனைகளுக்கு யாரிடம் நியாயம் கேட்பது? யாரை குறை சொல்வது என்று கூட தெரியாமல் பேசுகிறார். ‘கொள்கை எதிரி’ என்று சொல்லிவிட்டு அந்த எதிரியை விமர்சிப்பதே இல்லை விஜய்.
அடுத்ததாக விஜய் பேசும் எதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. மகளிர் பாதுகாப்பு என்கிற பெயரில் சட்டப்பூர்வமற்ற, சாத்தியமற்ற பலவற்றையும் தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கிறார். யாரோ எழுதிக்கொடுத்தாலும் அதை ஆய்வு செய்யாமல் அப்படியே வாசித்துவிட்டுப் போகிறார் விஜய்.

விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட் போட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு. இதை எல்லாம் அறியாமல், டெல்டாவில் விவசாயிகளுக்கு என்ன பிரச்சனை உள்ளது? என்பது பற்றி எல்லாம் அறிந்து பேசாமல், அரசியல் களமும், மக்கள் பிரச்சனைகளும் சினிமா பஞ்ச் டயலாக் என்று நினைத்துக்கொண்டு, டெல்டா – டால்டா என்று ரைமிங்காக பேசி தொண்டர்களின் விசில் சத்தத்தை வாங்கிவிட்டுப் போகிறார் விஜய்.
திமுக , அதிமுகவுக்கு மாற்று சக்தி என்று சொல்லிவிட்டு இந்த இரு கட்சிகளும் அறுபது ஆண்டுகளாக செய்ததையே செய்யப்போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார் விஜய்.
இதையெல்லாம் பார்க்கும் போது அவரு கிறுக்கனா? நாம கிறுக்கனா? என்ற கேள்விதான் பொதுமக்களிடையே எழுகிறது.



