உலகின் மிகப் பழமையான தொடர்ச்சியான அரச குடும்பமாக கருதப்படும் ஜப்பானின் கிரிஸான்தமம் சிம்மாசனம் (Chrysanthemum Throne), பாரம்பரியமாக 2,000 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை கொண்டுள்ளது.

இது ஜப்பான் நாட்டின் அரச குடும்பம் உலகிலேயே மிகப் பழமையானதாக கருதப்படுகிறது. ஆனால் இப்போது இந்த பழமையான அரச குடும்பத்தின் எதிர்காலம் ஒரு பெரிய நெருக்கடியில் உள்ளது.
என்னவென்றால், ஜப்பானில் பேரரசராக ஆட்சி செய்ய ஆண்களுக்கு மட்டும் அனுமதி உள்ளது. இந்த விதி 1947ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அமல்படுத்தப்படுகிறது. தற்போதைய பேரரசர் நருஹிடோவுக்கு ஒரு மகள் மட்டுமே உள்ளார். அவரின் பெயர் இளவரசி ஐகோ. சட்டப்படி பெண்கள் பேரரசராக ஆக முடியாததால், அவருக்கு அரியணையில் அமரும் உரிமை இல்லை. பேரரசரின் தம்பியான அகிஷினோவுக்கு ஒரே ஒரு மகன் உள்ளார். அந்த மகனே 19 வயதுடைய இளவரசர் ஹிசாஹிடோ (Hisahito).

இந்த நிலையில், எதிர்காலத்தில் ஹிசாஹிடோவுக்கு ஆண் வாரிசு பிறக்காவிட்டால், ஜப்பானின் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் ஆண் வழி அரச வம்சம் முடிவுக்கு வரும் அபாயம் உள்ளது. இதுவே தற்போது ஜப்பான் சமூகத்திலும் அரசியல் வட்டாரங்களிலும் பெரும் விவாதமாக மாறியுள்ளது.
பலர் இச்சட்டத்தை மாற்றி, பெண்களுக்கும் பேரரசராக ஆட்சியேற்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். ஆனால் பாரம்பரியவாதிகள், இது ஜப்பானின் வரலாற்று அடையாளத்துக்கு முரணாகும் என எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

ஒரே ஒரு இளைஞர் மீது ஒரு முழு அரச வம்சத்தின் எதிர்காலம் நின்று கொண்டிருக்கும் இந்த நிலை, “தனிமையான வாரிசு” என்ற பெயருக்கு சரியான உதாரணமாக மாறியுள்ளது. வரலாற்றையும் நவீனத்தையும் சமநிலைப்படுத்த ஜப்பான் எடுக்கும் முடிவு, உலகம் முழுவதும் கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கும்.(Online Tamil News)


