தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது அதிகாரப்பூர்வத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டது. தொடங்கி வைத்திருப்பவர், பிரதமர் மோடி. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க., அ.ம.மு.க., அன்புமணி பா.ம.க, மற்றும் ஜி.கே.வாசன் போன்ற வழக்கமான ஒற்றை நபர் கட்சிகளை உள்ளடக்கிய பா.ஜ.க கூட்டணியின் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மேலிடப் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியும் (Edappadi Palaniswami) டி.டி.வி.தினகரனும் ஒன்றாக மேடையில் இருப்பது இந்தக் கூட்டணியின் முதல் ஆச்சரியமாக இருந்தது. எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி அமைப்பதைவிட கயிற்றில் தொங்கலாம் என்ற பொன்மொழியை சில நாட்களுக்கு முன் உதிர்த்திருந்தார் தினகரன். அது உதிர்ந்து போய்விட்ட நிலையில், நானும் தினகரனும் அம்மாவால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் என்று புளகாங்கிதமடைந்தார் எடப்பாடி பழனிசாமி. அத்துடன், தி.மு.க.வை விமர்சித்த வைகோ இப்போது தி.மு.க. கூட்டணியில் இல்லையா என்று லாஜிக்காகவும் மீடியாக்களிடம் கேட்டார்.
அன்புமணி (Anbumani Ramadoss ) மேடையில் இருந்தார், மேடையில் இருந்த பேனரில் பா.ம.க.வின் மாம்பழம் சின்னமும் இடம்பெற்றிருந்தது. இது பற்றி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது கண்டனத்தைப் பதிவு செய்து, சின்னம் தொடர்பான பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கும்போது, பிரதமர் இதை அனுமதிக்கலாமா என்று ஆதங்கப்பட்டிருந்தார். 2016ஆம் ஆண்டு தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஓரிரு சுற்றுகளே முடிந்திருந்த நிலையில், தி.மு.கவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் முன்னும் பின்னுமான நிலைமை இருந்தபோதே, ஜெயலலிதாவின் வெற்றிக்கு வாழ்த்துச் சொன்னவர் பிரதமர் மோடி. அதன்பிறகுதான், ராதாபுரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளரான இன்றைய சபாநாயகர் அப்பாவுவை வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியே தூக்கிப் போட்டுவிட்டு, அ.தி.மு.க வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. அடுத்த சில மணிநேரங்களில் அ.தி.மு.க.வின் வெற்றி தொகுதிகளின் எண்ணிக்கை உயர்ந்தது. அப்படிப்பட்ட பிரதமர் மோடியிடம் ராமதாஸ் முறையிட்டு இருப்பது இந்தப் பிரச்சாரத்தின் மற்றுமொரு அதிசயம்.
தேர்தல் அரசியலில் கடந்த முறை என்ன நடந்தது என்பதைவிட, இந்த முறை என்ன நடக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு அரசியல் கட்சியின் கணக்காகவும் இருக்கும். அந்த வகையில், தமிழ்நாட்டில் நடைபெறும் தி.மு.க. ஆட்சிக்கு மாற்றாக, அ.தி.மு.க. பங்கேற்றிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சியை அமைக்க வேண்டும் என்று கூட்டணித் தலைவர்கள் பேசினார்கள். அமித்ஷா தொடங்கி பியூஷ்கோயல் வரை கூட்டணி ஆட்சி என்று சொல்லி வரும் நிலையில், பிரதமர் மோடியும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்பதையே திரும்பத் திரும்ப வலியுறுத்தினார். மோடி தனது பிரச்சாரத்தில் அ.தி.மு.க. என்ற வார்த்தையையே உச்சரிக்கவேயில்லை என்பது இந்தப் பொதுக்கூட்டத்தின் மூன்றாவது அதிசயம்.(Online Tamil News)
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சி செய்யும் வகையிலான டபுள் இன்ஜின் சர்க்கார் தமிழ்நாட்டிலும் அமையவேண்டும் என்பதை மட்டுமே மோடி திரும்பத் திரும்ப அழுத்தமாகச் சொன்னார். தி.மு.க. ஆட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியவர், பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் டபுள் இன்ஜின் சர்க்கார் சிறப்பாக இருப்பதாகப் பெருமைப் பட்டார்.
மோடியின் டபுள் இன்ஜின் சர்க்கார் பேச்சுக்குப் பதிலடி தந்த முதல்வர் ஸ்டாலின், டபுள் இன்ஜின் என்கிற டப்பா இன்ஜின் தமிழ்நாட்டில் ஓடாது என்று பதிவிட்டிருக்கிறார். மத்திய அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தராமலும், தமிழ்நாட்டுக்கான திட்டங்களில் அக்கறை செலுத்தாமலும் புறக்கணிக்கும் நிலையிலும் பா.ஜ.கவின் டபுள் இன்ஜின் சர்க்கார் நடைபெறும் மாநிலங்களைவிட தமிழ்நாடு பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அத்துடன், கர்நாடகா, தெலங்கானா, மேற்கு வங்கம் போன்ற சிங்கிள் இன்ஜின் சர்க்கார் நடைபெறும் மாநிலங்கள் நல்ல வளர்ச்சியைப் பெற்றிருப்பதையும் தமிழ்நாடு முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சிதான் மாநிலத்திலும் ஆட்சி அமைக்கவேண்டும் என்றும் அப்போதுதான் டபுள் இன்ஜின் சர்க்கார் அமைந்து, திட்டங்கள் நிறைவேறும் என்கிற மோடியின் பேச்சு, பிரதமர் என்கிற அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் விருப்பத் தேர்வு மீது பா.ஜ.க நடத்தும் மறைமுகத் தாக்குதலாகவே இது அமையும்.
பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போடு.. இல்லையென்றால் தமிழ்நாட்டுக்குத் திட்டங்கள் கிடையாது என்கிற அடாவடிக் குரல் பிரதமர் பிரச்சாரத்தின் முக்கியமான அதிசயம்.



