அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக உச்சகட்ட பதற்றம் நிலவி வந்த நிலையில், தற்போது இரு நாடுகளுக்கும் இடையே இரண்டு வார கால தற்காலிகப் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் சரிவைச் சந்தித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதி மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் அடிபடையில், ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த முடிவை ஏற்றுக்கொண்ட ஈரான், உலக நாடுகளுக்கு மிகவும் முக்கியமான போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க முன்வந்துள்ளது. ஈரானிய ராணுவத்தின் மேற்பார்வையில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்தக் கடல்வழிப் பாதையில் சரக்குக் கப்பல்கள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதிக்கப்படும் என்று ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
இந்த சமாதான அறிவிப்பு வெளியான உடனேயே உலகப் பொருளாதாரச் சந்தையில் அதன் தாக்கம் பிரதிபலிக்கத் தொடங்கியது. போர்ப் பதற்றத்தால் 110 டாலருக்கு மேல் எகிறிய பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, தற்போது 15 சதவீதம் வரை சரிந்து 95 டாலருக்குக் கீழ் வந்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு குறையும் என்ற நம்பிக்கையால் அமெரிக்கா மற்றும் ஆசியப் பங்குச்சந்தைகளும் கணிசமான உயர்வைக் கண்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த இரண்டு வார கால அவகாசம், நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும் என்று உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. இதற்கான முக்கியப் பேச்சுவார்த்தைகள் வரும் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்க உள்ளன. இந்தத் தற்காலிக அமைதி நீடிக்கும் பட்சத்தில், உலகளவில் நிலவி வரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி குறைய வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.(Online Tamil News)


