அதிமுகவில் ஓபிஎஸ்க்கு இனி இடமே இல்லை திட்டவட்டமாக சொன்ன பழனிசாமி, கூட்டணியில் இடமுண்டு என்பதை சூசகமாக சொல்லி இருக்கிறார்.
எத்தனை முறைதான் கேட்பீர்கள். பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க முடியாது என்று பழனிசாமி திட்டவட்டமாக சொன்ன பின்னரும் கூட அடுத்தகட்ட முடிவை நோக்கி நகராமல் இருப்பதால் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் 90 சதவிகிதம் பேர் ஓடிவிட்டனர். மிச்சம் இருக்கும் 10 சதவிகித ஆதரவாளர்களை வைத்து இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் பண்ணை வீட்டில் ஆலோசனை நடத்திய பன்னீர்செல்வம், ’’தனிக்கட்சி தொடங்கவோ பிறகட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடவோ நாங்கள் அதிமுக உரிமை மீட்புக்கழகம் தொடங்கப்படவில்லை. மக்களவை தேர்தலில் போட்டியிட்டது தொண்டர்கள் பலத்தை நிரூபிப்பதற்காகத்தான். 2வது தர்மயுத்தம் ஆரம்பிக்கப்பட்டதே மனோஜ்குமாருக்காகவும், வைத்திலிங்கத்திற்கு ஆகவும்தான்.

அதிமுக ஒன்றிணையவே இயக்கம் தொடங்கினோம். ஒன்றிணைந் தால்தான் பெரு வெற்றி பெற முடியும். எடப்பாடியுடன் இணைவதற்கு நான் ரெடி, அவர் ரெடியா? என்று டிடிவி தினகரன் கேட்டுச்சொல்ல வேண்டும். எதிரும் புதிருமாக இருந்த எடப்பாடி பழனிசாமியும் டிடிவி தினகரனும் ஒன்றிணைந் திருக்கிறார்கள். ‘அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி’ என்று சொல்கிறார் டிடிவி தினகரன். அவர்தான் ஒன்றிணைப்புக்கு வலியுறுத்த வேண்டும். ஒன்றிணைந்துவிட்டால் சட்டப்போராட்டம் முடிவுக்கு வந்துவிடும்’’ என்று அறிவித்தார்.
வழக்கம் போலவே பன்னீர்செல்வத்தின் இந்த கோரிக்கையை அலட்சியமாக புறந்தள்ளிவிட்டார் பழனிசாமி. அதிமுகவில் இனி பன்னீர்செல்வத்தை சேர்க்கவே முடியாது. இது நான் எடுத்த முடிவு அல்ல. 2500 பொதுக்குழு உறுப்பினர்கள் சேர்ந்து எடுத்த முடிவு. இதை மாற்ற முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.
அதிமுகவில் தான் இணைத்துக்கொள்ள முடியாது. சரி, என்.டி.ஏ. கூட்டணியிலாவது பன்னீர்செல்வத்திற்கு வாய்ப்பிருக்கிறதா? என்ற கேள்விக்கு, அதைப்பற்றி எல்லாம் வெளியே சொல்ல முடியாது என்று தடுமாறினார் பழனிசாமி.

அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியாது என்பதை அழுத்தமாகச் சொன்ன பழனிசாமி, கூட்டணியில் இணைய முடியாது என்று சொல்லவில்லை. அவரின் இந்த தடுமாற்றம்தான் பன்னீர்செல்வம் கூட்டணியில் இணையலாம் எனும் சூசகம்.
தினகரன் மாதிரி தனிக்கட்சி ஆரம்பிக்காததால் கூட்டணியில் எப்படி பன்னீர்செல்வம் இணைவது? ஒருவேளை அமமுகவில் இணைந்து என்.டி.ஏ.வில் இணைகிறாரா என்று தெரியவில்லை.
ஒன்று சேர வேண்டும் என்று திரும்பவும் பன்னீர்செல்வம் அதே பல்லவியை பாடுவாரா என்றும் தெரியவில்லை.



