பீகாரில் 2016 முதல் பீகார் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம், (Bihar Prohibition and Excise Act, 2016) என்ற பெயரில் மதுபான உற்பத்தி, விற்பனை, போக்குவரத்து மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடை செய்யும் சட்டம் அமலில் உள்ளது. இது மது மற்றும் போதைப்பொருட்களை முழுமையாகத் தடை செய்வதை நோக்கமாகக் கொண்டது. இந்தச் சட்டம் கடுமையான தண்டனைகளை விதிக்கிறது.சட்டவிரோத மதுபானம் தயாரிப்பவர்களுக்கு மரண தண்டனை வரை விதிக்கவும், சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் வழிவகை செய்கிறது.
இந்த நிலையில், பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், ஒரே நாளில் 463 பேருக்கு ஜாமீன் வழங்கி பாட்னா உயர் நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது. இது ஒரே நீதிபதி அமர்வு மூலம் ஒரே நாளில் வழங்கப்பட்ட அதிகபட்ச ஜாமீன் உத்தரவாகும்.

பீகார் மதுவிலக்கு மற்றும் உற்பத்தி வரி சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமீன் மனுக்கள் பெருமளவில் நிலுவையில் இருந்த நிலையில், நீதிபதி ஆர்.பி. மிஸ்ரா அமர்வு முன்பு திங்கட்கிழமை 508 வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. இதில் 33 வழக்குகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 12 வழக்குகளில் ஜாமீன் மறுக்கப்பட்டு, மீதமுள்ள 463 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டது.(Online Tamil News)
ஜாமீன் வழங்கப்பட்ட பெரும்பாலான வழக்குகள், சிறிய அளவில் மதுபானம் வைத்திருந்தது அல்லது அருந்தியது தொடர்பானவை ஆகும். மேலும், ஜாமீன் பெற்றவர்களில் பெரும்பாலோருக்கு எந்தவிதமான குற்றப் பின்னணியும் (criminal antecedents) இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து விசாரணை நேரத்தில், மதுவிலக்கு சட்டம் சரியான முறையில் செயல்படுத்தப்படாததே ஜாமீன் மனுக்கள் பெருமளவில் குவிவதற்கு காரணம் என நீதிபதி ஆர்.பி. மிஸ்ரா கருத்து தெரிவித்தார். மேலும்,மதுவிலக்கு சட்டத்தின் மோசமான செயல்பாடே நீதிமன்றங்களில் வழக்குகள் குவிய காரணமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசுத் தரவுகளின்படி, தற்போது (Bihar) பீகார் மாநிலத்தின் கீழ்நிலை நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் சுமார் 13,000 மதுவிலக்கு தொடர்பான ஜாமீன் மனுக்கள் நிலுவையில் உள்ளன. மாநிலத்தில் உள்ள 60 சிறைகளில் மொத்தம் 50,573 கைதிகள் உள்ள நிலையில், 10,402 பேர் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, முன்னாள் தலைமை நீதிபதி என்.வி. ரமணா, பீகார் மதுவிலக்கு சட்டம் “தொலைநோக்கற்றதும், அவசரமாக உருவாக்கப்பட்டதும்” என விமர்சித்திருந்தார். இந்தக் கருத்துக்குப் பிறகு, பீகார் அரசு சட்டத்தின் சில கடுமையான விதிகளை தளர்த்தியதும் குறிப்பிடத்தக்கது.


