தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற சென்னைவாசியின் நீண்டநாள் ஏக்கம் தீர்ந்தது என்று சிறையில் இருந்து சசிகலாவின் வருகை குறித்து பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் மறைமுகமாக சாடியிருந்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகி முதலமைச்சரும் ஆகும் நேரத்தில் சிறை தண்டனை தீர்ப்பினால் பழனிசாமியை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற சசிகலா கடந்த 2021ல் சிறையில் இருந்து சென்னைக்கு வரும் வரையிலும் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பினை பார்த்துதான் ராமதாஸ் அப்படி சாடியிருந்தார்.

சசிகலாவின் அந்த தடபுடலை பார்த்துவிட்டு அதிமுகவை கைப்பற்றிவிடுவார் என்ற பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், அவர் படு சாந்தமாகிப்போனார். அவரை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று பழனிசாமி திட்டவட்டமாக சொல்லிவிட்ட நிலையில் இப்போது வரையிலும் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று சொல்லிக்கொண்ட சசிகலாவுக்கு பெரும் ஏமாற்றம்.
இனியும் காத்திருப்பதில் அர்த்தம் இல்லை என்பதை புரிந்துகொண்ட சசிகலா விரைவில் தனிக்கட்சி தொடங்கி தன் ஆதரவாளர்களை தேர்தல் களமிறக்க முடிவு செய்திருக்கிறார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

அதனால்தான் இன்றைக்கு, ‘’எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தக்க பாடம் கற்பிப்போம்’’ என்று சூளுரைத்திருக்கிறார். அது மட்டுமல்லாது, ‘’39 வருட அரசியல் அனுபவம் இருக்கிறது. அம்மாவின் ஆட்சியை கொண்டு வர என்ன வேண்டுமானாலும் செய்வேன்.2026ல் எனது தலைமையில் அம்மா ஆட்சியை அமைப்பேன்’’ என்கிறார்.
ஓபிஎஸ் தனித்து விடப்பட்டிருப்பதால் அவரை என்.டி.ஏவில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று ஒரு தகவல் இருக்க, சசிகலா கட்சியில் அவர் இணைவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது என்றும், சசிகலா கட்சியின் நிறுவனத்தலைவராக இருக்கும் பட்சத்தில் ஓபிஎஸ் பொதுச்செயலாளர் ஆகும் வாய்ப்பு இருக்கிறது. நிறுவனர் – தலைவர் என்பதை எல்லாம் சசிகலா தவிர்த்துவிட்டால் சசிகலா பொதுச்செயலாளர் , ஓபிஎஸ் துணைப் பொதுச்செயலாளர் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.



