கொழும்பியாவில் சிறிய பயண விமானம் ஒன்று திடீரென தொடர்பை இழந்த நிலையில் விபத்துக்குள்ளாகி விழுந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைத்து 15 பேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானம் கொழும்பியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள நோர்டே டெ சாண்டாண்டர் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமப்புற பகுதியில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த விமானம் Satena என்ற அரசு கட்டுப்பாட்டிலுள்ள விமான நிறுவனத்துக்குச் சொந்தமானது. இது கூகுட்டா விமான நிலையத்திலிருந்து ஒக்கானா நோக்கி புறப்பட்டு சென்றபோது, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்துடன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் தகவல் கிடைத்ததும் மீட்பு குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. ஆனால், அங்கு விமானத்தில் இருந்த யாரும் உயிருடன் இல்லை என்று அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இந்த விபத்தில் 2 விமானப் பணியாளர்கள் மற்றும் 13 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இதில் கொழும்பிய நாடாளுமன்ற உறுப்பினரான Diógenes Quintero மற்றும் வரவிருக்கும் மார்ச் மாத தேர்தலில் போட்டியிட இருந்த அரசியல் வேட்பாளர் Carlos Salcedo ஆகியோரும் அடங்குவர்.(Online Tamil News)
விமானம் விழுந்த பகுதி மலைப்பாங்கானதும், பாதுகாப்பு சிக்கல்கள் அதிகம் உள்ள பகுதியாகவும் இருப்பதால், விபத்திற்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்திற்கு கொழும்பிய அதிபர் Gustavo Petro உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தங்களின் அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.


