யாரும் கொஞ்சமும் எதிர்பார்த்திராத வகையில் இந்த நாள் விடிந்திருக்கிறது. தேர்தலை முன்னிட்டு மூன்று மாதங்களுக்கு மகளிர் உரிமைத் தொகையை முடக்கப் பார்க்கிறார்கள் என்று தெரிந்ததால் முந்திக்கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3000 மற்றும் கோடைக்கால சிறப்புத்தொகுப்பாக ரூ.2000 என ரூ.5000,
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளது.

முதலைச்சரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இது குறித்து தனது வலைத்தள பக்கத்தில், ‘’முதலமைச்சரின் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான அறிவிப்பை வரவேற்கிறேன். ரூபாய் 5000 மகளிர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருப்பதும், எதிர்காலத்தில் மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 2000 ஆக உயர்த்தி வழங்கப்பட இருப்பதும் மகிழ்ச்சியான செய்திகள்.
பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு ரூபாயும் மிகுந்த பொறுப்போடும், கவனத்தோடும் செலவிடப்படும். வீட்டுக்கும், நாட்டிற்கும் பயன்படும். அவர்கள் அதை தங்களுக்காகவும் செலவு செய்ய வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் இந்த நேரத்தித்தில வெளிப்படுத்த விரும்புகிறேன்.
மகளிர் உரிமைத் தொகை அடுத்த இரண்டு மாதங்களுக்கு நமது சகோதரிகள் கையில் கிடைக்கக்கூடாது என்று சதி செய்த பாஜக -அதிமுக கூட்டணியின் திட்டத்தை முதலமைச்சர் வெற்றிகரமாக முறியடித்துள்ளார்கள்’’என்று பதிவிட்டிருக்கிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் இது குறித்து, ‘’தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமதுஅரசு! முதலமைச்சர் பதவியேற்றபோது, திமுகவுக்கு வாக்களித்தவர்கள், வாக்காளிக்காதவர்கள் என்று நினைக்காமல் அனைவருக்குமான முதலமைச்சராக இருப்பேன் என்று சொன்னேன். இந்த ஐந்து ஆண்டுகளும் அப்படித்தான் இருந்தேன். இனியும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எனக்கு பக்கபலமாக நீங்கள்தான் இருக்க வேண்டும்’’என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.



