மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலைத் தணிக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு முக்கிய வழித்தடமாக விளங்கும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடிவைத்தது. இதனால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலையோடு சமையல் எரிவாயு விலையும் கடுமையாக உயர்ந்தது. இந்த விவகாரத்தில் ஈரான் மீது கடுமையான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும், இன்று இரவு ஒரு நாகரிகமே அழிய பேகிறது என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த இக்கட்டான சூழலில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் அந்நாட்டு ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்காலிகப் போர் நிறுத்தத்திற்குச் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹார்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாகத் திறந்து கப்பல் போக்குவரத்தை உறுதி செய்தால், இரண்டு வாரங்களுக்குத் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என்று டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதி அளித்துள்ளார். ஈரானிடம் இருந்து பெறப்பட்ட பத்து அம்ச அமைதித் திட்டத்தை ஆராய்ந்து ஒரு நிரந்தர முடிவை எட்டுவதற்கு இந்த இரண்டு வார கால அவகாசம் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஈரான் அந்த இரண்டு வார காலத்திற்கு ஹார்முஸ் நீரிணையைத் திறக்கச் சம்மதித்துள்ளது. இந்தத் தற்காலிகப் போர் நிறுத்தமானது லெபனான் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் உடனடியாக அமலுக்கு வரும் என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு நிரந்தரமான அமைதி ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தைகளை வரும் ஏப்ரல் 10-ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடத்த பாகிஸ்தான் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தூதரக நடவடிக்கைகளின் மூலம் மத்திய கிழக்கில் ஒரு நிலையான அமைதி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.(Online Tamil News)


