மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் மேகம் சூழத் தொடங்கியுள்ளது. அதாவது, அமெரிக்கா தனது மிகப் பெரிய கடற்படை மற்றும் ராணுவ படைகளை ஈரானை (Iran) நோக்கி நகர்த்தி வருவதால், ஈரான்–அமெரிக்கா இடையிலான பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் இந்த ராணுவ நடவடிக்கை உலக நாடுகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்க தகவல்களின் படி, பல போர் கப்பல்கள், விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட ராணுவ படை மத்திய கிழக்கு பகுதிக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கை என அமெரிக்கா விளக்கம் அளித்தாலும், ஈரான் இதனை நேரடி அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. குறிப்பாக கடல் வழியாக ஈரானுக்கு அருகில் அமெரிக்க படைகள் குவிக்கப்படுவது, போர் அபாயத்தை அதிகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதற்கு பதிலளித்த ஈரான், “எந்த ஒரு தாக்குதலையும் முழு போராகவே கருதுவோம்” என்று கடுமையாக எச்சரித்துள்ளது.குறிப்பாக ஈரான் அரசின் உயர் அதிகாரிகள், நாட்டின் பாதுகாப்பு படைகள் முழுமையாக தயார் நிலையில் உள்ளதாகவும், தங்கள் நாட்டின் எல்லையிலும் இறையாண்மையில் தலையிடும் எந்த முயற்சியும் கடுமையாக எதிர்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்காவின் ராணுவ குவிப்பு திட்டமிட்ட போர் முயற்சியே என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.(Online Tamil News)

இந்த பதற்றத்திற்குப் பின்னணியாக, ஈரானில் நடந்து வரும் உள்நாட்டு அரசியல் குழப்பமும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டங்களை அரசு கடுமையாக அடக்கி வருவதாகவும், அதனால் பலர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்த விவகாரத்தில் ஈரான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே அமெரிக்கா ராணுவ பலத்தை காட்டுகிறது என்ற கருத்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
மேலும், ஈரானின் அணு திட்டம் தொடர்பான பழைய முரண்பாடுகளும் இந்த பதற்றத்திற்கு காரணமாக உள்ளன. தொடர்ந்து, ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சிப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், அந்த குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் பதற்றம் தற்போது ராணுவ மோதலாக மாறும் அபாயத்தில் உள்ளது.

இந்த சூழ்நிலை தொடர்ந்தால், அது ஈரான்–அமெரிக்கா (America) மட்டுமல்லாமல் முழு மத்திய கிழக்கு பகுதியையே பாதிக்கும் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. மேலும் எண்ணெய் விலை உயர்வு, வர்த்தக பாதிப்புகள், அகதிகள் பிரச்சனை போன்றவை உருவாகும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.


