பதினைந்து கோடி ரூபாய் வருமானத்தை மறைத்த குற்றத்திற்காக வருமான வரித்துறை விதித்த ரூ.1.5 கோடி அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற விஜய்யின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்து வருமான வரித்துறையின் அபராதத்தை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.
நடந்தது என்ன?
நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2015ல் வெளிவந்த படம் ‘புலி’. சிபுதமீன் – பிடி.செல்வகுமார் இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முதல் நாளில் தயாரிப்பாளர்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் , விஜய் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்து நடத்தினர்.
வருமான வரித்துறையினரிடம் விஜய் தாக்கல் செய்திருந்த 2015 – 16 நிதியாண்டிற்கான வரி கணக்கில் புலி படத்திற்காக பெற்ற வருமானம் ரூ.15 கோடியை கணக்கில் காட்டவில்லை. இது ரெய்டில் தெரியவந்தது.

வருமானத்தை மறைத்த குற்றத்திற்காக கடந்த 2022ல் விஜய்க்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது வருமான வரித்துறை. இந்த அபராதத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஏன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும்? என்று நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, சட்டப்படி இந்த அபராத உத்தரவு 30.6.2019க்கு முன்பே பிறப்பித்திருக்க வேண்டும். காலதாமதமாக 2022ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்று விஜய் தரப்பு வாதிட்டது. ஆனால், வருமான வரிச்சட்டப்படி விஜய்க்கு அபராதம் விதித்தது சரிதான் என்று வருமான வரித்துறை வாதிட்டது.

இரு தரப்பு வாதங்களையும் அடுத்து விஜய்யின் கோரிக்கையை ஏற்க மறுத்து நிராகரித்து அவரது கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி செந்தில் குமார ராமமூர்த்தி, வருமான வரித்துறையின் அபராதத்தை உறுதி செய்துள்ளார்.
வருமானத்தை மறைத்து அபராதத்தையும் செலுத்த மறுத்த விஜய்யின் அழுச்சாட்டியத்திற்கு நீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது. இதற்கு மேலும் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு சென்றால் அது விஜய்க்கு மேலும் அவப்பெயரையே ஏற்படுத்தும் என்கிற பேச்சு எழுந்திருக்கிறது.



