அண்மையில் திருச்சியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் அக்கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அமரவைத்திருந்தார் சீமான். இதே பாணியில் பரும் அடுத்த மாதம் இறுதியில் திருச்சியில் நடக்கும் பிரம்மாண்ட தவெக பிரச்சார பொதுக்கூட்ட மேடையில் தவெகவின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் ஏற்ற முடிவு செய்திருக்கிறார் விஜய்.

முன்னதாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் மும்முரத்தில் இருக்கிறார் விஜய். 50 பேர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்துள்ளார்கள் என்கிறது தவெக வட்டாரம். அவ்வளவு பேரையும் நேரில் அழைத்து நேர்காணல் நடத்தி தேர்வு செய்வது என்பது எளிதில் இயலாத காரியம் என்பதால், தங்கள் மாவட்டங்களின் சார்பாக இரண்டு பேர் அல்லது மூன்று பேரை தேர்வு செய்து கொடுக்கும் படி ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவு கொடுத்திருக்கிறார் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்.

இதன்படி மாவட்டச் செயலாளர்களும் பட்டியலை அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதில் இருந்து முதற்கட்டமாக 80 பேரை தேர்வு செய்திருக்கிறார் விஜய். இதை வைத்து முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வரும் 28ம் தேதி அன்று விஜய் வெளியிட இருக்கிறார் என்று தகவல்.

நேர்காணல் நடத்தாமலேயே வேட்பாளர்களை தேர்வு செய்து வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கும் விஜய் முடிவு கண்டு அதிர்ச்சியில் உள்ளனர் தவெகவினர். நேர்காணல் நடத்தினால்தான் அது ஜனநாயகம். நேர்காணல் நடத்தாமலேயே வேட்பாளர்கள் தேர்வு என்பது கண் துடைப்பு நாடகமா? என்று கடுப்பாகி கிடக்கிறார்கள் வேட்புமனு தாக்கல் செய்த தவெகவினர்.



