மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் ராணுவம் தனது கடல் எல்லைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
குறிப்பாக, உலக நாடுகளின் கச்சா எண்ணெய் தேவையில் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் முக்கிய போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால் அந்த வழியாகச் சென்ற சரக்குக் கப்பல்கள் மற்றும் சுற்றுலாத் தளவாடங்கள் அங்கேயே சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பு (IMO) வெளியிட்டுள்ள தகவலின்படி, சுமார் 20,000 மாலுமிகள் மற்றும் 15,000 சுற்றுலாப் பயணிகள் வளைகுடா கடற்பரப்பில் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். போர் தொடங்கிய கடந்த சனிக்கிழமை முதல் இதுவரை சுமார் 7 கப்பல் விபத்துகள் பதிவாகியுள்ளன. இதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு, ஏழு பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள IMO தலைவர் டோமிங்குவேஸ், இது வெறும் பொருளாதாரப் பிரச்சினை மட்டுமல்லாது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை என்றும், அப்பாவி மாலுமிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது என்றும் கவலை தெரிவித்துள்ளார்.(Online Tamil News)


