2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெகவில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை குழுவினை அறிவித்திருந்தார் அக்கட்சியின் தலைவர் விஜய். அந்த குழுவின் முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நடந்தது.
இந்தக்குழுவினர் மண்டலம் வாரியாக தமிழகம் முழுவதும் சென்று தவெக சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் மற்றும் சங்கங்களை சந்தித்து ஆலோசனை பெற்று, குறைகளை கேட்டறிந்து அதனை வைத்து தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட இருக்கிறது.
இன்று நடந்த ஆலோசனைக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் அருண்ராஜ்.

அப்போது அவர், ’’மத சார்பற்ற சமூக நீதியை அடிப்படையாக வைத்துதான் தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று தலைவர் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். மேலும், ஏழை, எளிய, விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை முன்னேற்றம் அடையும் வகையில், அனைத்து தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கும் ஏற்றம் தரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறார்.
அதன்படி சமூகநீதியை காக்கின்ற தேர்தல் அறிக்கையாக இருக்கும். கவர்ச்சியான திட்டங்கள் இடம்பெறாது. கவர்ச்சி என்றாலே அது மக்களை ஏமாற்றும் செயல் என்கிற பேச்சு வந்துவிடும். இலவசம் என்று சொல்லுவதும் தவறு. விளிம்புநிலை மக்களுக்கான அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான திட்டங்கள் அடங்கிய அறிக்கையாக இருக்கும்.
ஊழலற்ற நிர்வாகம் இருக்கும் என்பது முக்கியமானதாக இருக்கும்’’ என்றார்.



